கச்சத்தீவில் அநுரவின் திட்டத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு!

யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து சென்று வழிபடும் புனித தலமாக இருப்பதால், அதனை சுற்றுலா தலமாக மாற்றுவது மதத்திற்கு அவமரியாதையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, அரசாங்கத்தின் முயற்சி மத மற்றும் சமூக உணர்வுகளை புண்படுத்தும் அபாயம் உள்ளதாக மறைமாவட்டம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் திடீர் விஜயம் மேற்கொண்டு கச்சத்தீவு சென்றார். அவர் அங்கு உள்ள செயின்ட் அந்தோனியார் ஆலயத்தையும் பார்வையிட்டிருந்தார்.

குறித்த விஜயமானது, எந்த முன்னறிவிப்பும் இன்றி நடைபெற்றதுடன், ஜனாதிபதி, நாட்டின் தீவுகள், கடற்கரை மற்றும் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என அதன்போது வலிறுத்தியிருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரவின் விஜயம் கச்சத்தீவைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் சர்வதேச விவாதங்களுடன் தொடர்புபட்டது.

குறிப்பாக, இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கச்சத்தீவு குறித்து கருத்து வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி நேரடியாக கச்சத்தீவுக்கு சென்றது பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

இதேவேளை, குறித்த விஜயத்தில் கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்த அராசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பேசப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் அரசின் திட்டத்திற்கு யாழ்ப்பாண மறைமாவட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்