பிரேசிலைச் சேர்ந்த 22 வயதான தைனாரா மார்க்கோண்டஸ் என்ற பெண், ஜிகாண்டோமாஸ்டியா (Gigantomastia) எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு, மார்பகங்கள் மாதந்தோறும் அசாதாரணமாக வளர்ந்து கடுமையான வலியால் அவதிப்படுவதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தைனாராவின் மார்பகங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 750 கிராம் அளவு அதிகரித்து, ஆரம்பத்தில் மீடியம் அளவு டி-ஷர்ட்களை அணிந்தவர், இப்போது அன்றாட நடவடிக்கைகளான நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் ஓடுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். முதுகு மற்றும் கழுத்து வலியும் அவரை பாதித்துள்ளதாகவும் ஒரு முறை கடைக்கு சென்றபோது, அவரது மார்பக அளவு காரணமாக கடைக்காரர்கள் அவர் பொருட்களை மறைத்ததாக தவறாக எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களை அணுகியபோது, ஆரம்பத்தில் புற்றுநோய் சந்தேகம் எழுந்தது. பின்னர், ஜிகாண்டோமாஸ்டியா எனும் அரிய நோய் கண்டறியப்பட்டது. இது ஹார்மோன் சமநிலையின்மை, கர்ப்பம், உடல் பருமன் அல்லது மருந்துகளால் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தைனாராவுக்கு மார்பகத் திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும், திசுக்கள் மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





