7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.
மென்மையான குணமும் கொண்ட இவர்கள் தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.
புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக் கொண்டால் தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர். பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.
நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.
அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.