அமெரிக்க விவசாய பணிமனையின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor) மற்றும் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) அரச தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அரச தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில், உணவுப்பாதுகாப்பை மேம்படுத்தல், காலநிலைமாற்ற சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையை ஊக்குவித்தல் என்பவற்றின் ஊடாக இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா கொண்டிருக்கும் வலுவான உறுதிப்பாட்டினை துணைச்செயலர் அலெக்சிஸ் டெய்லர் வெளிக்காட்டினார்.
அத்தோடு சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப்பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிரான மீண்டெழும் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ‘2024 முன்னேற்றத்துக்கான உணவு’ எனும் திட்டத்தில் ஒரு முன்னுரிமை நாடாக இலங்கை வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது. அது மாத்திரமன்றி இலங்கையில் 15,000 க்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்களுக்கு அவர்களது பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவிய 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய ‘சந்தையை மையப்படுத்திய பாலுற்பத்தி’ எனும் செயற்திட்டம் பற்றியும் இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய நிலைத்தன்மை மற்றும் சுபீட்சம் ஆகியவற்றைப் பேணிவளர்ப்பதற்கான தமது பரந்துபட்ட இலக்கின் ஓரங்கமாகவே இலங்கைக்கு இவ்வுதவிகளை வழங்கியிருப்பதாகவும், இதனூடாக நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் தெரிவித்துள்ளது.
இதில் அரச தலைவரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரச தலைவரின் சர்வதேச அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது