ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு சீன தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.
பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர்,நேற்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது, அறிவித்துள்ளார்.
சீனாவின் இந்த உளவு கப்பல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையிலேயே இந்த நகர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கான அனுமதியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சுஇ பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று வழங்கியுள்ளன.
கப்பல் இப்போது இந்தோனேசியாவிற்கு அருகே நடுக்கடலில் நேரடியாக ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
அதில், யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஜதந்திர விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு( Third person note) மூலம் இலங்கை கோரியிருந்தது.
இந்த கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அவசரச் சந்திப்பு ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார். இந்த சந்திப்பே நேற்று இடம்பெற்றுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





