பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்
உலகத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.
நெற்றி வியர்வையினை நிலத்தில் சிந்தி, உழைப்பையே தமது மூலதனமாகக் கொண்டு , தாம் வாழும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற தொழிலாளர்களின் உன்னத தன்மையினை உலகிற்கு அறிமுகப்படுத்திய இதே தினத்தில் தான் அவர்களது அடிமைச் சங்கிலி உடைத்தெறியப்பட்டது.
உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாள் உலகிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிய முக்கியமான நாளாகும்.
உழைப்பாளர்களின் ஒற்றுமையையும், மன உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய இந்த நாளில் தான் , உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை, ஊழியத்திற்கேற்ற ஊதியம் முதலானவற்றை சட்டபூர்வமாக உலக அரங்கில் அங்கீகாரம் செய்யப்பட்டது.
1886 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியன்று சிக்காகோ நகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்ற மே தினமாகும்.
உலகின் பல்வேறு நாடுகளால் இத் தினம் வெவ்வேறு பெயர்களால், வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது.
அனேகமான நாடுகளில் இந்த தினம் உத்தியோகபூர்வமான விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளமை இதனது சிறப்பம்சமாகும்.
உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கும், அவர்கள் தங்களது உரிமைகளை தட்டிக் கேட்பதற்கும் உறுதுணையாக நின்றவர் தான் , பொதுவுடமைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவரும், ” மூலதனம்” ( The Capital) என்ற பிரசித்தமான நூலை இயற்றியவரும், ஜேர்மன் நாட்டுத் தத்துவஞானியுமான “கார்ல் மார்க்ஸ்”, என்பவர் ஆவார்.
” உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. அடிமைச் சங்கிலிகளைத் தவிர…ஆனால், பெறுவதற்கோ பொன்னான ஒரு உலகம் காத்திருக்கின்றது” என்ற உன்னதமான கோஷத்தினை எழுப்பி, அனைத்து தொழிலாள வர்க்கத்தினரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தவர் ஆவார்.
1867 ஆம் ஆண்டு வெளியான ” மூலதனம் ” என்னும் நூலில் ” வேலை நாள் குறித்து” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடும் பொழுது, ” வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும்.
இது இல்லாமல் தொழிலாளி வர்க்கம் முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டப்பூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்” , என்று குறிப்பிடுகின்றார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பும், தியாகச் சிந்தையும் இன்றியமையாதது.
உழைப்பாளர் வர்க்கம் என்றொன்று இல்லாமலிருந்திருந்தால் இந்த உலகம் இன்று நிலை தடுமாறிப் போயிருந்திருக்கும்.
உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர்களின் கைகளில் தான் இவ்வுலகம் தங்கியுள்ளது.
அவ்வாறான தொழிலாள வர்க்கம் உலகிற்கு ஆற்றுகின்ற பங்களிப்பினை நினைவு கூறும் முகமாக இத் தினம் கொண்டாடப்படுகின்றது.
உழைப்பாளர்கள் மக்களுடைய நாளாந்த செயற்பாடுகளில் பின்னிப் பிணைந்துக் காணப்படுவதனால் அவர்களது பங்களிப்பினை நினைவு கூறுதல் அவசியமாகும்.
எமது நாட்டில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்தினருக்காகவும் குரல் கொடுத்த “தொழிலாளர் இயக்கத்தின் தந்தை” எனக் கருதப்படுகின்ற அலெக்ஸாண்டர் ஏக்கநாயக்க குணசிங்கவை இத்தினத்தில் நினைவு கூறுவது அவசியமாகும்.
இலங்கையினது தொழிற்சங்க வரலாற்றில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இன்று நடக்கும் மே தின விழாவில் பங்கேற்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் , தொழிற்சங்கங்களும், தங்களது கோஷங்களை வழமை போல முன் வைத்தாலும் கூட , இந்த வருடம் இக்கட்சிகள் வரவிருக்கின்ற தேர்தல்களைக் கருத்திற் கொண்டு, தத்தமது வாக்கு வங்கிகளை எவ்வாறு அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதில் அக்கறை செலுத்துமென்று எண்ண இடமுண்டு.
மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களில் அங்கம் வகிக்கின்ற பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் , தாம் சார்ந்த மக்களின் வேதன உயர்வு சம்பந்தமாக பல்வேறுப்பட்ட காலங்களில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருந்தாலும் கூட , இன்றும் அந்த மக்களது வேதன உயர்வு அதிகரிக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.
இவர்களது சம்பள உயர்வு அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு உயர்த்தப்படுமா அல்லது அது கானல் நீராகவே காட்சி அளிக்குமா என்பதனைக் கூட காலம் தான் தீர்மானிக்கும்.
அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவினை சமாளிக்கக் கூடிய வகையில் வருமானம் இல்லாத ஒரு நிலையிலேயே இன்றைய தொழிலாள வர்க்கம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் பல குடும்பங்கள் தமது உணவு நுகர்வினைக் கூட குறைக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு படிப்பு , மருத்துவம் , மற்றும் வேறு தேவைகளுக்கு பணத்தினை ஒதுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் பல்வேறு கட்சிகளும் அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவினைக் கண்டித்தும், மிக உயர்ந்த அளவில் காணப்படுகின்ற பொருட்கள் சேவைகளின் மீதான வரியமைப்பினை கண்டித்தும், மக்களது வருமானத்தை அதிகரிக்க கோரியும் தமது கோஷங்களை முன் வைக்கலாம் எனக் கருத முடியும்.
மாறாக , இந்த அரசியல் கட்சிகள் எவ்வாறு வாழ்க்கைச் செலவை குறைக்க முடியும் ? மக்களது வேதனத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் ? எமது ஏற்றுமதி பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் ? அந்நிய செலாவணியை எவ்வாறு அதிகரிக்க முடியும் ? போன்ற பல்வேறுபட்ட விடயங்களுக்கு ஒரு தீர்வினை தத்தமது கூட்டங்களுக்கு வருகின்ற மக்களுக்கு தெளிவுபடுத்தினால் , அது மக்கள் மனங்களில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு, அவர்களது சிந்தனையில் ஒரு நேர்மறைத் தன்மையினை ஏற்படுத்துவதாக அமையுமெனக் கருத நியாயமுண்டு.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று ஒரு பதற்றமான சூழ்நிலைக்கு வித்தாக இருக்கின்ற இஸ்ரேலிய – பாலஸ்தீன யுத்தத்தினால் பாலஸ்தீன தேசத்தை சேர்ந்த தொழிலாள வர்க்கம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கூட கோஷங்கள் முன்வைக்கப் படுமெனக் கருதலாம்.
இவ்வாறான பல்வேறுபட்ட சிந்தனைக் கண்ணோட்டத்தில் கொண்டாடப்படுகின்ற உழைப்பாளர் தினமானது உழைக்கும் வர்க்கத்தினது அபிலாசைகளை வென்றெடுக்குமானால் அது பாராட்டப்படக் கூடியது. கோஷங்கள் , அறிக்கைகள் என்பன வெறுமனே வாய்ச்சொல்லில் மாத்திரம் இல்லாமல், அது செயற்பாட்டு உருவில் வரும் பொழுது தான் மக்களது மனதிலும் அது நீடித்து நிலைத்திருக்கும்.
உழைப்பாளர் தினம் தொடர்பாக பல கவிஞர்கள் காலத்தால் அழியாத பல பாடல்களை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தனர்.
கவியரசு கண்ணதாசனின் வரிகளில்,
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை”.
” ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”.
” துடிக்கும் ரத்தம் பேசட்டும் துணிந்த நெஞ்சம் நிமிரட்டும் உழைக்கும் வர்க்கம் சேரட்டும் உரிமை உடமை காணட்டும்”.
தங்களது உழைப்பை வியர்வையாக சிந்தி, மானிட வர்க்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அனைத்து உழைப்பாளர் வர்க்கத்தினருக்கும் , எமது மனமார்ந்த மே தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)