மின் உற்பத்தி மேலும் பாதிப்படையும் அபாயம்!

இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களில் பேண வேண்டிய குறைந்தபட்ச நீர்மட்டத்தை விடவும் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காசல்ரீ, மவுஸ்ஸாகல, சமனல வெவ, கொத்மலை, விக்டோரியா மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், நாட்டின் நீர்மின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படக்கூடும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் மின்சார உற்பத்தியை பாதித்த எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கை ஏற்கனவே நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளது. இதனால் நாளாந்தம் 7 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீர் மின் உற்பத்தியை நம்பியிருப்பதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

காசல்ரீ நீர்த்தேக்கம்:

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து 13.41 மீற்றர்களாக குறைந்துள்ளதுடன், குறித்த மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 19 மீற்றர் வரையில் மட்டுமே நீர் மட்டத்தை குறைக்க முடியும்.

எனினும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவில் தற்போது 16.5% அளவிலான நீர் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அதனூடாக 15.7 கிகாவாட் மணிநேர மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும்.

மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கம்:

மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 12.84 மீற்றர் வரை குறைந்துள்ளதுடன், நீர் மட்டத்தினை வான்கதவிலிருந்து 22.4 மீற்றர் வரை மட்டுமே குறைக்க முடியும். இதன்படி, தற்போது மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவில் 30.9% நீர் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அதனைக் கொண்டு 87.7 கிகாவோட் மணிநேர மின்சாரத்தை மாத்திரமே உற்பத்தி செய்ய முடியும்.

சமனல வெவ நீர்த்தேக்கம்:

சமனல வெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்தில் இருந்து 23.24 மீற்றர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்சம் நீர்மட்டத்தினை வான்கதவிலிருந்து 31 மீற்றர் வரையில் மட்டுமே குறைக்கப்பட முடியும்.

இதன்படி, சமனல வெவ நீர்த்தேக்கத்தில் 16.3% சதவீத நீர் மாத்திரமே எஞ்சியுள்ளது. இதன்மூலம் 23.24 கிகாவோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

கொத்மலை நீர்த்தேக்கம்:

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 24.10 மீற்றராக குறைந்துள்ளதுடன், நீர்த்தேக்கத்தின் நீீர்மட்டத்தை அதிகபட்சமாக 38 மீற்றர் வரை மட்டுமே குறைக்க முடியும். இதன்படி, கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்போது எஞ்சியுள்ள அளவைக் கொண்டு 31.7 கிகாவோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். மொத்த கொள்ளளவில் 22.1% நீர் மாத்திரமே குறித்த நீர்த்தேக்கத்தில் எஞ்சியுள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கம்:

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உபரிநீர் மட்டத்திலிருந்து 24.72 மீற்றராகக் குறைந்துள்ளது. மேலும் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தை குறைந்தபட்சம் 68 மீற்றர் வரை மட்டுமே குறைக்கப்பட முடியும். அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் அளவு இது மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் ஆகும். இதன்மூலம் 152.6 கிகாவோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்,

ரந்தெனிகல நீர்த்தேக்கம்:

ரன்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது உச்ச நீர் மட்டத்தில் இருந்து 8.48 மீற்றராக குறைந்துள்ளதுடன், நீர்த்தேக்கத்தின் குறைந்தபட்சம் நீர் மட்டத்தை 23 மீற்றராக மட்டுமே குறைக்க முடியும். தற்போது நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 56.3 வீதமாக காணப்படுகிறது. இதன்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் நீரின் அளவைக் கொண்டு 60.5 கிகாவோட் மணித்தியால மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

நாட்டின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதால் மேற்கண்ட நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக இந்த மகாவலி நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை விடுவிப்பதும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.

எனவே மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு கோரியுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்