போன வாரம் 500 ரூபாய்க்கு விற்ற பொருட்கள் இந்த வாரம் 1000 ரூபாய்

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை லாஃப் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,680 ரூபாவாக நிர்ணயித்துள்ளதுடன், 2 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 672 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்றும் நீண்ட வரிசைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக அதிகாலை முதல் வரிசைகளில் நின்று கொண்டிருக்கின்றனர்.

எனினும், இறுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடனேயே மக்கள் வீடு திரும்புகின்றனர்.

இலங்கை ரூபாவிற்கு நிகரான டாலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையிலேயே, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பால்மா விலை திடீரென அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலையை நேற்று முதல் அதிகரிக்க பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 1945 ரூபா என்பதுடன், 400 கிராம் பால்மா பாக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், உணவகங்களில் பால் தேநீர் 100 ரூபாவை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும், உணவகங்களில் பால் தேநீர் விற்பனையை முழுமையாக நிறுத்தவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

எனினும், எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், தேநீருக்கான விலையை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான திடீர் அதிகரிப்புக்கு மத்தியில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இதன்படி, கொழும்பு – முகத்துவாரம் பகுதியிலுள்ள பேக்கரி, உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அந்த வர்த்தக நிலையங்களுக்கு வருகைத் தரும் வாடிக்கையாளர்களுடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தினோம்.

முகத்துவாரம் பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வரும் ஹில்மியிடம் பிபிசி தமிழ் இதுகுறித்து பேசியபோது,

”எரிவாயு விலை அதிகரித்தது எங்களுக்கு சரியான கஷ்டமா இருக்கு. எரிவாயு தேடி தேடி போனாலும் கிடைப்பதில்லை. சில இடங்களில் இல்லனு சொல்றாங்க. சில இடத்தில் விலை அதிகமா சொல்றாங்க. இதனால், பேக்கரி செய்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. கேஸ் விலை 4500 ரூபா 5000 ரூபாவிற்கும் விற்குறாங்க. கேஸ் விலை அதிகரித்த பிறகு வியாபாரம் குறைவா இருக்கு. மாவு இல்ல. ஒரு மூட்டை மாவு இன்றைக்கு 9250 ரூபா. சீனி 8000 ரூபா. மற்ற பொருட்களும் விலை அதிகரித்துள்ளதால், வியாபாரம் மிகவும் கம்மியா தான் இருக்குது” என ஹில்மி தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை ஹில்மி பட்டியலிட்டார்.

”முன்னர் 80 ரூபாய்க்கு விற்ற பிஸா, இப்போது 90 ரூபா. இனிப்பு பன் 80 ரூபாவிற்கு விற்றது, இப்ப 100 ரூபா. பாண் 90 ரூபாவிற்கு விற்றது இப்ப 120 ரூபா. எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரிச்சுட்டு தான் இருக்குது” என்றார் ஹில்மி

”கேஸ் இல்லாம கடை ஒரு நாள் மூடி, ஒரு நாள் திறந்து பயங்கர பிரச்னையாகவுள்ளது. இப்ப நிலக்கரியில் தான் சமைச்சுகிட்டு இருக்கோம். கேஸ் விலை கூடி, அரிசி விலை கூடி, மரக்கறி எல்லாம் விலை கூடி, பருப்பு விலை கூடி, எல்லாமே விலை அதிகமாகிவிட்டது. சாப்பாடு பழைய விலைக்கு கொடுக்க இயலாது. வடை எல்லாம் முன்னர் 40 ரூபா 50 ரூபாவிற்கு விற்று கொண்டு இருந்தோம். இப்ப உளுந்து வடை எல்லாம் 80 ரூபாவிற்கு தான் கொடுக்குறோம். ஆட்கள் அதிகமாக சாப்பிட வருவதும் இல்லை,” என பார்த்தீபன் குறிப்பிட்டார்.

180 ரூபாவாக காணப்பட்ட சைவ சாப்பாடு ஒன்றின் தற்போதைய விலை 220 ரூபா என்பதுடன், மீன் சாப்பாடு ஒன்றின் புதிய விலை 250 ரூபாவாகவும், கோழி சாப்பாடு ஒன்றின் புதிய விலை 280 ரூபா எனவும் உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவகத்திற்கு வருகைத் தந்த வாடிக்கையாளர் ஒருவரும், பிபிசி தமிழிடம் பேசினார்.

”எந்த பொருளை எடுத்தாலும், விலை தான். 800 ரூபாவிற்கு இருந்த ஒரு கிலோ சீரகம், இன்று 1800 ரூபா. பெருஞ்சீரகம் 600க்கு இருந்தது, 1500 ரூபா. இப்படி எல்லாம் விலை கூட. 500 ரூபாவிற்கு இருந்த காய்ந்த கொச்சிக்காய் (காய்ந்த மிளகாய்) 1100, 1200 ரூபா. சாதாரண மக்கள் எல்லாம் சாகுற நிலைமை தான்” என அவர் குறிப்பிட்டார்.

முகத்துவாரம் பகுதியில் பழ விற்பனை நிலையத்தை நடத்தும் சிவஞானம் அரியதாஸன், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

”விலைகள் எல்லாம் அதிகமாக இருக்கு. பழங்களுடைய வரி விதிப்பு காரணமாக ஆப்பிள் எல்லாம் விலை கூட. சாதாரணமாக 80 ரூபா 100 ரூபாவிற்கு இருந்த ஆப்பிள் பழங்களை 150 ரூபா, 160 ரூபாவிற்கு விற்க வேண்டியதா இருக்குது. திராட்சை ஒரு கிலோ 1700 ரூபா 1600 ரூபாவிற்கு விற்க வேண்டி இருக்கு. பெரிய பெரிய புட் சிட்டில எல்லாம் அப்பிள் 210 ரூபா 220 ரூபாவிற்கு விற்குறாங்க. நமக்கு அந்த மாதிரி விற்க முடியாது. ஆப்பிள் பெட்டி ஒன்று வாங்கிட்டு வந்தால், 3 நாட்கள முன்ன வித்து முடிப்போம். இப்ப 2 கிழமைக்கு அப்படியே இருக்குது. பழங்கள் விற்க மாட்டேங்குது. நாட்டின் நிர்வாகம் சரியில்லை என்று தோன்றுகிறது. நிர்வாகத்தை சரிப்படுத்தினால் நிலைமை சரியாகும் என்று நினைக்கின்றோம்” என அவர் கூறுகின்றார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளுக்கு அதிக வரி விதிப்புக்கள் அரசாங்கத்தினால், அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பழ வகைகளின் விற்பனைகளை ஊக்கப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட உர பிரச்னை காரணமாக, உள்நாட்டு பழங்களின் வளர்ச்சிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் சந்தனம் கோடன், பிபிசி தமிழிடம் பேசினார்.

”சொல்லக்கூட முடியாத நிலைமையில தான் வியாபாரம் போகுது. சரியான மோசமான நிலைமையில போய் கொண்டு இருக்கு. முன்ன இருந்த விலைவாசிக்கும், இப்ப இருக்க விலைவாசிக்கும் சரியான மாதிரி வித்தியாசம். சாதாரணமாக கடந்த வாரம் எடுத்த பொருட்களுக்கும், இந்த வாரம் எடுக்க போற பொருட்களுக்கும் 500 ரூபா 1000 ரூபாவிற்கு இடைப்பட்ட வித்தியாசம் ஏற்பட்டுள்ளது” என சந்தனம் கோடன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாளாந்தம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றமையினால், தாம் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிகை அலங்கார நிலைய (சலூன்) உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் வருகைத் தரும் முக்கியமான நேரத்திலேயே மின்சாரம் தடைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால், நாளாந்தம் தாம் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி இன்று தீவிர நிலைமையை நோக்கி நகர்ந்துள்ள பின்னணியில், மக்கள் பாரிய பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BBCtamil

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்