வரலாற்றில் இல்லாத உயர்வுக்கு என்ன காரணம்?
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை.
பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது.
கோழி தீவனங்களுக்கான விலை அதிகரிப்பே முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் எம்.ஏ.எம். தாஹிர்.
முன்னர் 3,200 ரூபாவுக்கு கிடைத்த முட்டைத் தீன் (கோழிகளுக்கு முட்டையிடும் பருவத்தில் வழங்கப்படும் தீன்) தற்போது 6,800 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தாஹிர் தெரிவிக்கின்றார்.
கோழி தீவனத்துக்குரிய பிரதான உள்ளீடுகளில் ஒன்றான சோளத்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 65 ரூபாவுக்குக் கிடைத்த ஒரு கிலோ சோளம், தற்போது 125 ரூபா வரையில் விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கோழி தீவனகளுக்குரிய உள்ளீட்டுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக் காரணமாக, கோழித்தீன்களின் தரம் குறைவடைந்துள்ளது. அவ்வாறு தரம் குறைந்த தீன்களை கோழிகளுக்கு வழங்கும் போது, முட்டைகள் இடுகின்ற எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படுகிறது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
1,000 கோழிகள் உள்ள பண்ணையொன்றில் சாதாரணமாக 850 முட்டைகள் கிடைத்து வந்ததாகவும், தற்போது தரம் குறைவான தீன்களை வழங்குவதால் சுமார் 650 முட்டைகளையே பெற்றுக் கொள்ள முடிவதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர் தாஹிர் கூறினார்.
இதேவேளை எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளமையினால் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடைந்துள்ளன என்றும், முட்டை விலை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவருக்கான நாட்கூலி தற்போது 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் அவர்; தொழிலாளர்களுக்கு முன்னர் 100 ரூபாவுக்குப் பெற்றுக் கொடுத்த காலை உணவை தற்போது 220 ரூபாவுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
பண்ணைகள் மூடப்பட்டமையினால் ஏற்பட்ட தாக்கம்
இதேவேளை, கொவிட் தொற்று தீவிரமாக இருந்த காலப்பகுதியில் கணிசமானளவு கோழிப் பண்ணைகள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது சந்தையில் முட்டைகளின் கேள்விக்கேற்ப உற்பத்தி இல்லாமையினால் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் – கோழித்தீன் மற்றும் முட்டை வியாபாரத்தில் ஈடுபடும் ஏ.ஆர்.ஏ. அஸீஸ் தெரிவிக்கின்றார்.
“கொவிட் தொற்று தீவிரமாக இருந்த காலப்பகுதியில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் கோழிப் பண்ணையாளர்களுக்கு தமது முட்டைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தீன்களுக்கான விலைகளும் அதிகரித்ததால் கோழிப் பண்ணைகள் நஷ்டத்தில்தான் இயங்கின. அதனால் கணிசமானோர் தமது பண்ணைகளை மூடிவிட்டனர்” என, அஸீஸ் விவரித்தார்.
முட்டைகளை அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கே களஞ்சியப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“முட்டைக் கோழிகளை 24 மாதங்கள் வரையில்தான் முட்டைக்காக வளர்ப்பார்கள். அதற்குப் பின்னர் முட்டையிடுவதில் வீழ்ச்சி ஏற்படும். ஒரு கோழி அதன் 04ஆவது மாதத்தில்தான் முட்டையிடத் தொடங்கும். அதிகபட்சமாக 18 மாதங்கள் வரையில் கோழிகள் முட்டையிடும்” எனவும் அஸீஸ் கூறினார்.
மேலும் முட்டையின் விலை 30, 32 ரூபா வரையில் இன்றும் அதிரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோழி தீன்களுக்குரிய உள்ளீடுகளான சோளம் மற்றும் கருவாட்டுத் தூள் போன்றவற்றினை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதால், அவற்றின் மீதான வரி அதிகரிப்பினால் கோழித் தீன்களுக்கான விலைகள் உயர்வடைவதாகவும், அதன் காரணமாக முட்டையின் விலையில் உயர்வு ஏற்படுவதாகவும் அஸீஸ் விளக்கம் அளித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
இலங்கையில் தற்போது அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளும் அதிகரித்துள்ளமையினால் வாழ்க்கைச் செலவு சடுதியாக அதிகரித்துள்ளது.
இறைச்சி, மீன் மற்றும் மரக்களிப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடற்றொழிலில் நடைபெறும் கரையோரப் பிரதேசங்களில் எப்போதும் இல்லாதவாறு மீன்களில் விலை உயர்வடைந்துள்ளது.
இதேவேளை பால்மாகளுக்கான விலைகள் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயுக்களுக்கு விலை அதிகரித்துள்ளதோடு, சந்தையில் அவற்றுக்கான தட்டுப்பாடுகளும் நிலவி வருகின்றது.
மேலும் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளதோடு, அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் இவ்வருடம் ஜனவரி மாதம் பணவீக்கம் 14.2 வீதமான அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கின்றது. அதேவேளை உணவுப் பணவீக்ம் ஜனவரி மாதம் 25 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com