இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கிறது? BBC

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கிறார்.

சில நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்த அவர் பிபிசி தமிழுக்க அளித்த நேர்க்காணலில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நேர்க்காணலில் இருந்து:

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை எவ்வாறு இருக்கிறது?

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவது பணவீக்கத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, மின்சாரத் தடை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் என அரசாங்கத்தின் மீதான விரக்தி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு 8 பில்லியன் டாலராக இருக்க வேண்டும், அது தற்போது பூஜ்ஜியமாக உள்ளது.

நிலங்களை விற்று, இலங்கையின் சொத்துக்களை வேறு நாடுகளுக்கு வழங்கி தான் தன்னுடைய இருப்பை தக்கவைக்க முடியும் என இலங்கை அரசு கருதுகிறது. இலங்கையில் நேர்மையான பொருளாதார வல்லுநர்கள் இல்லாததும் அரசாங்கம் இனவாத ரீதியில் செயல்படுவதுமே இதற்கு அடிப்படையான காரணம்.

கொரோனாவை பொருளாதார பின்னடைவுக்குக் காரணம் காட்டி இலங்கை அரசு தப்பித்துக் கொள்ள முடியாது.

இலங்கையில் மலையகத் தமிழர்கள் மனிதாபிமானமற்ற, அவலமான நிலையில் வாழ்ந்து வருவதாக ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது?

இலங்கையில் மலையகம், வடக்கு – கிழக்கு, கொழும்பு என வெவ்வேறு பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் அரசியல் நிலைமை ஒன்றுபோல இல்லை. வடக்கு – கிழக்கில் அரசியல் உரிமைகளுக்காக போராடுகிற சூழ்நிலையில் மலையகத் தமிழர்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டிய நிலை உள்ளது.

இலங்கையில் காடும், மலையுமாக இருந்த பிரதேசத்தை வளமான பூமியாக மாற்ற ரத்தம், வியர்வை சிந்தி உழைத்தவர்கள் மலையகத் தமிழர்கள். அவர்களின் வாழ்நிலை பற்றி ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மை.

மலையகத் தமிழர்களின் நிலையை உயர்த்த கூலி உயர்வைத் தாண்டி அவர்களுக்கு முதலில் நிலம் வழங்க வேண்டும். கூலி வேலை செய்பவர்கள் தங்களுடைய சொந்த நிலங்களில் பயிர்செய்து தொழில் செய்யும் நிலைக்கு உயர்த்த வேண்டும், இதில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஆனால், இனவாத சிங்கள அரசு அதை உணராது. மாறாக மலையகத் தமிழர்களை வெளியேற்றி அங்கே சிங்களவர்களை குடியேற்றும் வேலையைத் தான் செய்து வருகிறது.

இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிற அதே வேளையில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது சாத்தியமா? அதற்கு ஏதுவான சூழல் உள்ளதா?

இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழர்களின் அதிகார வலிமையும் சரிந்து கொண்டே செல்கிறது. இதை சரி செய்ய இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த தலைமுறை இலங்கை திரும்புவதற்கு விரும்பவில்லை என்பது எங்களுக்கு புரிகிறது. தமிழ்நாட்டில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல இம்மக்கள் இலங்கை திரும்புவதற்கான உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசும், இந்திய அரசும், சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவதை இலங்கை அரசு விரும்புகிறதா?

தமிழர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதை இலங்கை அரசு ஒருபோதும் விரும்பாது. அதனால் தான் தமிழர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் வேலைகளையும் செய்து வருகிறது. தமிழர் பகுதிகளில் மட்டும் ராணுவ கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. இந்த அச்சம் கூட தமிழர்கள் தாயகம் திரும்பி வரத் தயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இலங்கை அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

கொழும்பு துறைமுக நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீனர்களுக்கென பிரத்யேகமான இடம் ஒதுக்கப்படுகிறது. இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இதில் இந்திய அரசு தலையிட முடியுமா? எப்படி?

கொழும்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை இந்தியா பெரிய ஆபத்தாக கருதுவதாக நாங்கள் எண்ணவில்லை. ஆனால், வடக்கு – கிழக்கு போன்ற இந்தியாவுக்கு நெருக்கமான தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் சீனாவின் தலையீடு என்பது இந்தியாவுக்கு எப்போதும் ஆபத்தானது. விடுதலைப் புலிகள் இருந்த வரை இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்துவந்தார்கள். இந்தியாவும் விடுதலைப் புலிகளும் சரியான புரிதல்களோடு நடந்திருந்தால் இந்தியாவுக்கு பாதுகாப்பான நிலைமை உருவாகியிருக்கும் என்பது தான் என்னுடைய கருத்து.

இலங்கைத் தமிழர் விவகாரத்துக்கு தீர்வாக 13வது திருத்தத்தை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகையில், அதிகாரப் பகிர்வு சாத்தியமே இல்லை என ராஜபக்சேக்கள் கூறி வருகின்றனர். தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன?

சமஷ்டி (கூட்டாட்சி) முறைதான் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. இந்தியப் பிரதமர் மோதி கூட இலங்கை வந்திருந்தபோது கூட்டாட்சி முறைதான் இலங்கைக்கு ஏற்றது எனக் கூறியிருந்தார். 13வது திருத்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இணைந்த வடகிழக்கு இன்று இல்லை, தற்காலிகமாக கொடுக்கப்பட்ட அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டன. 13வது திருத்தம் என்பதே தற்போது பெரிய கேள்விக்குறிதான். இதில் தான் இந்தியாவின் தலையீடு முக்கியமாக தேவைப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பதில், இந்திய அரசு முழுமையான அக்கறை காட்டுகிறதா அல்லது இன்னும் கூடுதல் நடவடிக்கை தேவையா?

இந்தியா மீது விமர்சனம் வைப்பது எங்களுடைய வேலை இல்லை. இந்தியா தமிழர்களுடைய பிரச்சனையில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பாக கையெழுத்திட்டது இந்தியாதான். இந்தியாவின் பாதுகாப்பும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் தான் அடங்கியிருக்கிறது. அதனால், இந்தியாவுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது இந்தியாவுக்கு காலத்தின் தேவையும் தார்மீகக் கடமையும் கூட.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பதில் தமிழ்நாட்டு அரசு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இப்போதைய சூழலில் தமிழ்நாட்டு மக்களிடம் எங்களுக்கான ஆதரவு குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களும் ஈழத் தமிழர் விவகாரத்தில் அக்கறையோடுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வதற்கே போதிய காலம் இல்லாத சூழலில் எங்களுடைய பிரச்சனைகளையும் சேர்த்து அழுத்தம் கொடுத்து பேச வேண்டும் என்பதும் கடினம். அதே சமயம் எங்களுக்கான ஆதரவு இருப்பதும் உண்மை. அது ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறோம்.

இலங்கையில் தமிழர் தரப்பில் ஒற்றுமை இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே கருத்து முரண்பாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

உலகத்தில் யாரிடமும் ஒற்றுமை என்பது இல்லை. வல்லரசு நாடுகளிடம் கூட ஒற்றுமை இருப்பதில்லை. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கூட ஒற்றுமையாக இருந்ததாக சரித்திரம் இல்லை. புலம்பெயர் தமிழர்கள் கூட பல்வேறு அமைப்புகளாக பிரிந்துதான் இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களிடம் ஆயிரம் வேறுபாடு இருக்கலாம். ஆனால் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்கிற கொள்கை ஒன்றாகத்தான் உள்ளது. ஒற்றுமையை வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அது உடனடியாக சாத்தியப்படாது.

இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தற்போது வரை தீர்வு இல்லை. ஐ.நாவின் 30/1 தீர்மானத்திலிருந்தும் இலங்கை விலகிவிட்ட நிலையில் போர்க்குற்ற விசாரணை என்பது சாத்தியமாகுமா?

2015-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது. அதற்கு அப்போதைய இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், அதில் துளி அளவு கூட முன்னேற்றம் இருக்கவில்லை. தற்போதைய அரசு இராணுவத்தை பாதுகாப்போம் என்று இனவாதமாக இருந்து வருகிறது. இதனால்தான் சர்வதேச சமூகமும் இலங்கை மீது இறுக்கமான பார்வையைக் கொண்டுள்ளது. இதுவும் இலங்கையில் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் என நாங்கள் ஒருபோதும் நம்பவில்லை. சர்வதேச சமூகம் தான் இதைச் செய்தாக வேண்டும்.

இலங்கையின் சீமான் என சுமந்திரன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் குற்றம்சாட்டியிருந்தார். சுமந்திரன் அவர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சிக்கல் எனக் கூறப்படுவது உண்மையா?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த விதமான சிக்கலும் இல்லை. முதலில் சுமந்திரனையும் சீமானையும் ஒப்பிடுவதே தவறு. சீமானின் அரசியல் ஒரு விதமானது சுமந்திரனின் அரசியல் ஒரு விதமானது. அவர்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பேசுவது அடிமுட்டாள்தனமானது. திலீபன் அவ்வாறு பேசுவது அவருடைய அறியாமையைத் தான் காட்டுகிறது.

இலங்கைத் தமிழர், விடுதலைப் புலிகள் தொடர்பாக சீமான் தெரிவிக்கும் கருத்துக்களை இலங்கைத் தமிழ் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்களை முன்வைப்பது எங்களுக்குப் பொருத்தமானதல்ல. இங்குள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டியது எங்களுடைய தேவை. 1970களில் திமுக – அதிமுக என்கிற இரு கட்சிகள்தான் இருந்தன. ஆனால், இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் உள்ளன. பலரும் ஈழத் தமிழர்களுக்காக பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள். நாங்கள் அனைத்து அமைப்புகளுடனும் பேச வேண்டிய தேவை உள்ளது. ஒருவரை உயர்த்தி, ஒருவரை தாழ்த்திப் பார்ப்பது எங்களுக்கு அழகல்ல.

சம்பந்தன் அவர்களுக்குப் பிறகு, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்காலத்தில் யார் தலைமை தாங்கப் போகிறார்கள்?

தலைவர்களை இன்னொரு தலைவரோ, கட்சியோ உருவாக்குவதில்லை. தலைவர்களை மக்கள்தான் உருவாக்குகிறார்கள். அதைப்போல தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் தேவை ஏற்படுகிற நேரத்தில் உரிய தலைமையை காலமும் மக்களும் தேர்வு செய்வார்கள்.

கூட்டாட்சி முறைதான் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு என இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் கூறி வருகிற நிலையில் தனி ஈழம் அமைவது நிரந்தர தீர்வு என தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினர் நம்புகிறார்கள். இதில் உங்களின் நிலைப்பாடு என்ன?

நியாயமான கோரிக்கையாக இருக்கலாம். யாருடைய எண்ணங்களிலும் பிழைகளைக் காண்பது எங்களுடைய நோக்கமல்ல. மற்றவர்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்கிறார்கள். அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவ்வாறு தனி ஈழம் அமைந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நாங்கள் ஒரு காலத்தில் அதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்தான். இலங்கையில் இன்றைய சூழலில் எங்களால் அதைப் பேச முடியாது. மற்றவர்கள் சுதந்திரமாகப் பேசலாம். அவ்வாறு பேசுவது கூட வரலாற்றில் எங்களுக்கான இடத்தைப் பெற்றுத்தரலாம். https://www.bbc.com/tamil/sri-lanka-59561434


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்