இலங்கையின் சுபீட்சச் சுட்டெண்ணானது 2019இல் பதிவாகிய 0.783 உடன் ஒப்பிடுகையில் 2020இல் 0.786 இற்கு சிறிதளவு அதிகரித்தது. ஆண்டுக்காலப்பகுதியில் கொவிட் 19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் ‘மக்கள் நலநோன்புகை’ துணைச் சுட்டெண், மேம்பட்ட அதேவேளை ‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’ மற்றும் ‘சமூகப் பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச் சுட்டெண்களில் வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன.
நல வசதிகளுக்கான அதிகரிப்புக்களும் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் இடஒதுக்கீட்டில் அதிகரிப்பின் மூலம் எடுத்துக்காட்டப்பட்ட உயர் கல்விக்காக தோற்றுவிக்கப்பட்ட அதிக வாய்ப்புக்களும் மக்கள் நலநோன்புகைச் சுட்டெண்ணின் அதிகரிப்புக்கு பங்களிப்புச் செய்தன. மேலும், உலகளாவிய நோய்த்தொற்று காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்த கைத்தொழில் நடவடிக்கைகள், வாகனப் புகை வெளியேற்றம் குறைவடைந்தமை மற்றும் மக்களின் மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம் என்பவற்றின் விளைவாக தோற்றம்பெற்ற வளியின் தரம் மற்றும் தூய்மையான சூழல் என்பனவும் துணைச் சுட்டெண்களினுள் பதிவாகிய அதிகரிப்புக்கு முக்கிய நிர்ணயக் காரணிகளாக இனங்காணப்பட்டன.
கொவிட் -19 உலகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான விளைவுகளுக்கு மத்தியில், முறைசார் மற்றும் முறைசாரா இரு தொழில்நிலை வகைகளிலும் தொழிலின்மையின் அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் நடவடிக்கைகளின் மந்தமான செயலாற்றத்தினால் தோற்றுவிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி என்பன 2020 இல் பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணின் வீழச்சிக்கு முக்கிய காரணங்காளாக அமைந்தன.
சுகாதார ரீதியான இடர்நேர்வுகளின் காரணமாக பொதுப் போக்குவரத்து பாவனையில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியுடன் இணைந்து ஆண்டுக்காலப்பகுதியில் விதிக்கப்பட்ட முடக்கல்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றினால் துண்டப்பட்டு நோய்த்தொற்றுக் காலத்தில் போக்குவரத்து குறைவடைந்தமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புத் துணைச் சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளாக அமைந்தன.