பொதுவானவை

ஆடை ஏற்றுமதி மத்திய பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளராக அல்ஃபா அப்பரல்ஸ்

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளரும், இத்தாலியை தளமாகக் கொண்டியங்கும் Calzedonia S.p.A குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமுமாகத் திகழும் அல்ஃபா அப்பரல்ஸ், 24ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில், 2019/20 ஆண்டுக்கான நடுத்தரளவு பிரிவில் சிறந்த ஆடை ஏற்றுமதியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நவம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கலந்து கொண்டார். நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு பங்களிப்பு வழங்கி, அதனூடாக பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் நிறுவனங்களின் ஒப்பற்ற செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

பொல்கஹாவெலவில் அமைந்துள்ள அல்ஃபா அப்பரல்ஸ், 2200 க்கும் அதிகமான ஊழியர்களைத் தன்வசம் கொண்டுள்ளது. இதனுடன் இணைத்து, ஒமெகா லைன் குழுமத்தினால் 1300க்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகோலப்பட்டுள்ளது. இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, ஆடைத் தொழிற்துறையின் முக்கிய பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக இந்தக் குழுமம் திகழ்வதுடன், நாட்டினுள் அந்நியச் செலாவணியை கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், உள்ளார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்குவதோடு, நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சகல பாகங்களிலும் தனது உற்பத்தி வளாகங்களைக் கொண்டுள்ளது.

Sirio லிமிடெட் மற்றும் அல்ஃபா அப்பரல்ஸ் லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான பீலிக்ஸ் ஏ. பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மிகவும் நெருக்கடியான காலப்பகுதியிலும் தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, தியாகங்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகளினூடாக தமது அயராத உழைப்பை வெளிப்படுத்தும் அல்ஃபா அப்பரல்ஸ் நிறுவனத்தின் எமது சகல ஊழியர்களுக்கும் இந்த விருதை நாம் சமர்ப்பிக்கின்றோம். நாம் குழுமமாக உறுதியாக மீண்டெழுந்துள்ளோம். எமது செயற்பாடுகளை விரிவாக்கம் செய்வது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருவதுடன், ஆடைத் தொழிற்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டாளராக எம்மை நிலைநிறுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார். இவர் ஒமெகா லைன் குரூப் குழும பணிப்பாளராகவும், பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது சகல ஊழியர்களுக்கும் தொடர்ச்சியான பயிலல் மற்றும் விருத்தி சார்ந்த கலாசாரத்தை அல்ஃபா அப்பரல்ஸ் பேணி வருவதுடன், ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை கொண்டிருக்கக்கூடிய அழுத்தமில்லாத சூழலையும் கொண்டுள்ளது. அனைத்து ஊழியர்களும், பணியிடத்தை தமது இரண்டாவது இல்லம் என அழைக்கின்றனர். ஊழியர்களுக்கு பரந்தளவு தொழில்நிலை விருத்தி வாய்ப்புகள், ஆலோசனை வழங்கல்கள், மென் திறன் பயிற்சிகள் போன்ற பல அனுகூலங்களை நிறுவனம் வழங்கி, பிராந்தியத்தின் ஏனைய நிறுவனங்களிலிருந்து தன்னை வேறுபடுத்தியுள்ளது.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு சமூகத்துக்கும் நீடிக்கப்பட்டுள்ளது, ‘Hasarellak Soya’எனும் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினூடாக, முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உதவிகளை வழங்குவதுடன், சூழலை பாதுகாக்கும் வகையில் ‘Mihikathata Tharusevanak’ எனும் திட்டத்தையும் முன்னெடுக்கின்றது.

குழுமத்தின் தாய் நிறுவனம் லக்செம்பேர்க் நகரிலுள்ள Calzedonia Finanziaria ஆக அமைந்துள்ளதுடன், அதன் பிரதான வாடிக்கையாளர் இத்தாலியின், கல்செடோனியாவில் அமைந்துள்ளது. பெண்களுக்கான உள்ளாடைகள், காலுறைகள், இரவு நேர ஆடைகள், ஸ்டொக்கிங்கள் மற்றும் நீச்சல் உடைகள் போன்றவற்றை Calzedonia S.p.A தயாரிக்கின்றது. 5000 க்கும் அதிகமான ஒற்றை வர்த்தக நாமம் கொண்ட விற்பனை நிலையங்களை கொண்டுள்ளதுடன், அவை உலகளாவிய ரீதியில் 57 நாடுகளில் நேரடியாக அல்லது Calzedonia, Intimissimi, Tezenis, Falconeri, Intimissimi Uomo மற்றும் Atelier Eme ஆகிய வர்த்தக நாம அங்கீகாரத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன.

உள்நாட்டைச் சேர்ந்த இதர துணை நிறுவனங்களுக்கு விருதுகளை வெற்றியீட்டுவது என்பது புதிய விடயமல்ல. இவற்றில் ஒமெகா லைன் லிமிடெட், Sirio லிமிடெட், பென்ஜி லிமிடெட் மற்றும் வவுனியா அப்பரல்ஸ் ஆகியன அடங்கியுள்ளன. 2018/19 ஆண்டுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் Sirio லிமிடெட்டுக்கு ஆடைத் தொழிற்துறையின் – மெரிட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. 2017/18 ஆண்டுக்கான ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஒமெகா லைன் லிமிடெட்டுக்கு ஆடைத் தொழிற்துறையின் உயர் பெறுமதி சேர் உற்பத்தி ஏற்றுமதியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னைய ஆண்டில் ஆடை உற்பத்தி வியாபாரப் பிரிவில் ஏற்றுமதிச் சிறப்பு விருதையும் சுவீகரித்திருந்தது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

Most Popular

To Top