அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.

இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது.

இப்போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதமும் பெருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இப்போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவந்த போதிலும் ரஷ்ய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பைடன் தடைவிதித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த தடையை தற்போது தளர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

பைடனின் இந்த முடிவால் உக்ரேனின் ஆதரவு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் தங்கள் ஆயுதங்களை ரஷ்யாவிற்குள் உள்ள இராணுவ இலக்குகள் மீது பயன்படுத்த உக்ரேனை அனுமதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம் எனவும் ஜேர்மனியும் யோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் முடிவானது ரஷ்ய அதிகாரிகள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்