இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்க்கு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் ஆன்லைன் கொள்முதல் மூலம் செயல்படும் மோசடி குழு இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், மோசடி செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு நாணயத்தின் அளவை தற்போது தீர்மானிக்க முடியாது என்றும் தபால் மா அதிபர் ஜெனரல் ருவான் சத்குமார தெரிவித்தார்.

இந்த மோசடியின் கீழ், வாடிக்கையாளர்கள் வழக்கமாக ஒரு சிறிய தொகையை, பெரும்பாலும் ரூபா 100க்கும் குறைவாக, ஆன்லைன் பார்சலைப் பெற செலுத்துமாறு கேட்டு ஒரு குறுஞ் செய்தியை அனுப்புகின்றனர்.

வாடிக்கையாளரின் வங்கி மூலம் பணம் செலுத்தப்பட்டதும், மோசடிக் காரர்கள் வங்கி கணக்கு விவரங்களை சேமித்து கொள்கின்றனர்.

இந்தக் குழு இலங்கை தபால் திணைக்களம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஒத்த போலி வலைத்தளங்களையும் உருவாக்கியுள்ளது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அவர்கள் OTP குறியீடுகளையும் பயன்படுத்துவதாக அறியப்படுகிறது.

இந்த மோசடி மூலம் அடையாளம் காணப்பட்ட நிதி இழப்புகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சுவிஸ் மற்றும் பிரிட்டிஷ் நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் அடங்கும்.

இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவு, கணினி அவசரகால பதிலளிப்பு குழு (SART) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் பிரிவு ஆகியவற்றுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த மோசடி தொடர்பாக கணிசமான எண்ணிக்கையிலான புகார்கள் துறைக்கு வந்துள்ளதாக அஞ்சல் துறை தொழில்நுட்பப் பிரிவின் துணை பணிப்பாளர் சம்மி விஜிதபால உறுதிப்படுத்தினார்.

அஞ்சல் துறை ஆன்லைன் கட்டணங்களுக்கான வசதிகளை வழங்காததால், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அஞ்சல் துறை மூலம் எந்த ஆன்லைன் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என்று அஞ்சல் மா அதிபர் சத்குமார மற்றும் துணை பணிப்பாளர் விஜிதபால அனைத்து அஞ்சல் வாடிக்கையாளர்களையும் கேட்டுக்கொள்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்