முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து சிரமதானப் பணிகள் ஆரம்பம்!

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் நேற்றையதினம் (02) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழு உறுப்பினர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தபிசாளர் அனோஜன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவீரர்களின் உறவினர்கள் என பலரும் இணைந்து துயிலும் இல்ல வளாகத்துக்கு சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பணிக்குழு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அங்கு இடம்பெற்றது.

அக் கலந்துரையாடலில் 2025 ம் ஆண்டுக்குரிய மாவீரர் எழுச்சி நாள் நினைவேந்தலை முன்னிட்டு புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டதோடு, அந்நிகழ்வை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இதில், பணிக்குழுவின் தலைவராக விஜிந்தன் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனப் பலர் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.

அவரின் தலைமையிலேயே பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும் அங்கிருந்தோர் தெரிவித்தனர். அதேவேளை, ஏனைய நிர்வாக உறுப்பினர்களும் புதியதாக தெரிவு செய்யப்பட்டனர்.

துயிலும் இல்லத்தின் வரவு–செலவு அறிக்கைகள், சிரமதானப் பணிகள் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வரும் புதன்கிழமை (05.11.2025) காலை 8 மணிக்கு துயிலும் இல்ல துப்பரவு பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்குமாறு பணிக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்