இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Sanakiyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் குறித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை அறிவித்த வேளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி (ITAK) அரசு சார்பாகவும் இல்லை.
அரசுக்கு எதிராகவும் இல்லை. வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறோம். ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் 2026 வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளோம்.
ஜனாதிபதி எங்கள் பிரச்னைகளை தீர்க்க முன்வருவார். தமிழர் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வார்.
எமது மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார். பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களை கேட்பார் என்றார்.





