குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது.
இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





