கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,
“’குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல’ என்ற ஜனாதிபதியின் அறிக்கை, நாட்டை ஒரு கிரீடத்துடன் கூடிய முடியாட்சிக்கு திரும்பச் செய்யும் முயற்சியா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஆனால் தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இருந்து வேண்டுமென்றே குறித்த வசனம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
கிரீடம் பற்றிய அவரது உரை நாட்டின் பல கட்சி முறையை ஒழிக்கவும், ஒற்றைக் கட்சி அரசாங்கத்திற்கு மாறவும், குடியரசு அரசியலமைப்பை இரத்து செய்யவும் முன்மொழிகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
கிரீடத்தை மீண்டும் கொண்டு வந்து அணிய வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கமா? பெரும்பான்மை வாக்குகளைப் பெறாத ஆட்சியாளராக அவர் செயற்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது.
இந்த நாட்டின் மக்களையும் மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். அவரது அறிக்கை அந்த சத்தியப்பிரமாணத்திற்கு முரணானதாக தோன்றுகிறது.
பல கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து ஒற்றைக் கட்சி ஆட்சியை நோக்கி நகரும் ஜனாதிபதியின் முயற்சியைத் தோற்கடிக்க அனைத்து சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





