மாணவர் உரிமை என்ற போர்வையில் தொடரும் அநீதி,பல்கலைக்கழகங்களில் படுகொலை !

அறிவை கற்பிக்க வேண்டிய இடம், அச்சத்தையும் மரணத்தையும் விதைக்கும் கல்லறையாக மாறியிருப்பது, நம் நாட்டிற்கே ஒரு கறுப்பு தழும்பு.

பகிடிவதையால் வீழும் மாணவர்களும் போதையில் மூழ்கும் இளைஞர்களும் ஒரே சமூகத்தின் துயரமான பிரதிபலிப்புகள்.

வவுனியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவன், மூத்த மாணவர்களின் வற்புறுத்தலால் மது அருந்தி உயிரிழந்த துயரச்சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அந்த மாணவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தற்போது மரணத்தின் போது அவரது உடலில் அதிகளவு மது இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது, எந்தவொரு நோயும் கண்டறியப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இத் திடீர் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தினர்.

உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் கூறியுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருக்கவிலையென்றும் , பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து உடல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மரணத்தின் உண்மையான காரணத்தை மறைக்க முயற்சிகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும் போனது ஒரு உயிர் மாத்திரமல்ல, ஒரு மாணவனின் கடைசி சுவாசத்தில் தாயின் நம்பிக்கை, குடும்பத்தின் கனவு, சமூகத்தின் எதிர்காலம் எல்லாம் இறந்து விடுகிறது.

பகிடிவதை என்ற போர்வையில் முடிவில்லா வன்முறை

கடந்த பல தசாப்தங்களாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் வன்முறை, மிரட்டல், மற்றும் இளைஞர்களின் உயிரை பறிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் இருந்து அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிக்க முயற்சித்தாலும், சில மாணவர் கூட்டமைப்புகளின் பழைய பிரிவுகள் இன்னும் பகிடிவதையை ஒரு கலாச்சாரமாகக் கொண்டிருக்கும் போக்கை காண முடிகிறது.

புதிய மாணவர்களை அரசியல் போராட்டங்களுக்கு வலுக்கட்டாயமாக இணைக்க செய்வதே இவர்களின் நோக்கம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

1990 ஆம் ஆண்டுகளில் சில பல்கலைக்கழக பட்டதாரிகள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருந்த காரணத்தால் தனியார் நிறுவனங்கள் அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மறுத்துவிட்டன.

இந்த பட்டதாரிகள் தனியார் துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் முதல் நேர்காணலிலேயே அவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

50 ஆண்டுகளில் 35 உயிர்கள்

1974 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பகிடிவதை சம்பவங்களில் 35 இளங்கலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

1997 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொறியில் பீட மாணவன் ஒருவர் பகிடிவதையால் உயிாிழந்தார். பிரதான குற்றவாளியான மாணவன், வெளிநாட்டுக்குச் தப்பிச் சென்றுவிட்டார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

2015 ஆம் ஆண்டில் இல் சபரகமுவ பல்கலைக்கழக மாணவி அமலி சதுரிகா பகிடிவதை காரணமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் நினைவுகளிலிருந்து அழியவில்லை.

அந்த மாணவி உயிரிழப்பதற்கு முன்னர் தனது அனுபவங்களையும் குற்றவாளிகளின் விபரங்களையும் எழுத்தில் பதிவு செய்திருந்தார்.

பொறுப்பானவர்களின் வயது, முகவரிகள் மற்றும் பிற அடையாளம் காணும் தகவல்களுடன் பெயரிட்டார். சில அதிகாரிகள் குற்றத்தை மறைக்க முயன்றதால், சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

கடந்த கால ஊழல் ஆட்சிகள் பகிடிவதை விவகாரத்தை இப்படியே கையாண்டன. இதுபோன்ற குற்றங்கள் எவ்வளவு காலத்திற்கு முன்பு நடந்தன என்பதைப் பொருட்படுத்தாமல் விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

இன்னும் பலர் தற்காலிக காயங்கள், அதிர்ச்சி மற்றும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளங்கலை மாணவர்கள் நம்பிக்கையுடன் பல்கலைக்கழகத்தில் நுழைந்தனர்.

அரசு பல்கலைக்கழகங்களில் நுழைந்த போதிலும், தங்கள் படிப்பைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது காரணம் பகிடிவதை. அவர்களுக்கு கல்வி கற்பிக்க குடும்பங்கள் தியாகங்களைச் செய்கின்றனர்.

அரசியல் மற்றும் போதையின் அரங்கமாக மாறியதா பல்கலைக்கழகங்கள்?

ஒரு புறம், பல்கலைக்கழக மாணவர்களையும் பாடசாலை மாணவர்களையும் பலவந்தமாகவும், அச்சுறுத்தியும், பகிடிவதை எனும் போர்வையிலும் போதையின் அடிமைகளாக மாற்றுகின்றனர்.

மறுபுறம், சுவை, ஆசை மற்றும் கவர்ச்சியை காட்டி மாணவர்களை வன்முறையிலும் தீய பழக்கங்களிலும் ஈடுபடச் செய்யப்படுகிறார்கள்.

இதில் அரசியல்வாதிகள், சில மாணவர் கூட்டமைப்புகள், தற்காலிக சக்திகளின் ஆதரவோடு புதிய தலைமுறையை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக கையாளும் மிகப்பெரும் பங்கை கொண்டிருக்கின்றனர்.

கல்வி கற்கும் புனித இடம் அரசியல் மற்றும் போதையின் அரங்கமாக மாறி, மாணவர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் சீரழிப்பதாக பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு

பகிடிவதையை ஒழிக்க சமூகமும் பெற்றோர்களும் பங்காற்ற வேண்டும். மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு முன்னர் பெற்றோர் அவர்களை பல்கலைக்கழகத்துக்கு அழைத்து சென்று சூழலை அறிமுகப்படுத்துவது சிறிய செயல் என்றாலும் அது பயனுள்ள நடைமுறையாக இருக்கும்.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் கிராமம் அல்லது நகரத்திலிருந்து ஏற்கனவே யார் இந்த பல்கலைக்கழத்தில் கல்வி கற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சட்ட அமுலாக்கம் அவசியம்

பல்கலைக்கழகங்கள் எவராலும் கட்டுப்படுத்தப்படாத இடங்களாக இருக்கக்கூடாது. பல்கலைக்கழகங்களில் சட்டம் அமல்படுத்தப்படாமலும், பொலிஸார் தலையிடாமலும் இருக்கவும் கூடாது.

சிலர் “இது மாணவர்களின் உலகம், வெளியோர் தலையிடக்கூடாது” என்று நினைப்பார்கள், ஆனால் அது தவறு.

பல்கலைக்கழகத்துக்குள் சட்டம் குறிப்பாக ஒழுக்க விதிகள் கடுமையாக நடைமுறையில் இருக்க வேண்டும். எவரேனும் வன்முறையோ, பகிடிவதை செய்தாலோ, மாணவர்கள் என்று பாராது சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும். அதாவது பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய ஒழுக்க விதிகளின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மாணவர் அழுத்தத்திற்கோ, அரசியல் தாக்கத்திற்கோ இடமின்றி பொலிஸாரும் ஆயுதப்படைகளும் தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் வலியுறுத்தல்.

மேலும் தேவைக்கேற்ப அதாவது உப வேந்தர் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரில், பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸ் பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற வன்முறை, பகிடிவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நமது இளைய தலைமுறை நிஜமான கற்றலும், சுதந்திரமான வளர்ச்சியும் இன்றி, வலிமை, போதை மற்றும் அரசியல் மயக்கத்தின் ஆழத்தில் தொலைந்து போகும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்த்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்க விதிகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், குறித்த விதிகளுக்கு அமைவாகவே பகிடிவதைகளில் மாணவர்கள் ஈடுபட முடியும் என்றும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது.

இது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான மாணவர்கள் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேரவையின் தீர்மானத்துக்கு ஏற்ப ண்டனை வழங்கப்பட வேண்டும்.

குறித்த காலத்துக்கு வகுப்பு இடைநிறுத்தம், அல்லது முற்றாக நீக்கம் செய்தல், குற்றவியல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை போன்ற விதிகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உண்டு.

ஆகவே, போதும் மாணவர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் பட்டப்பகலில் செய்யப்படும் இக் கொலைகள் முடிவுக்கு வர வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்