பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க, நாட்டிலுள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடப்படவுள்ளது.
வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபாவாகவும், பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபாவாகவும் ஆகவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
கீல்ஸ், காகில்ஸ் புட் சிட்டி, லாப்ஸ் சூப்பர், ஸ்பார் மற்றும் குளோமார்க் உள்ளிட்ட முன்னணி வியாபார நிலையங்கள் இணைந்து இதனை அறிவித்துள்ளன.
இதன்மூலம், பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் பைகளை தம்வசம் எடுத்துச் செல்ல ஊக்குவிக்கின்றனர்.
இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சிறிய படியாகும் என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான பொருட்கொள்வனவு நடைமுறைகளுக்கு மாறுவதனை ஆதரிக்க பொதுமக்களை வலியுறுத்துவதாக, இந்த திட்டம் அமைந்துள்ளது.





