செல்வம் வென்றதற்கும், சித்தர் தோற்றதற்குமான சங்குவின் சுவாரஸ்ய பின்னணி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை அடித்த போதும், வடக்கில் அதனை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடிய வாய்ப்பிருந்தது. அதை தமிழ் கட்சிகள் கோட்டை விட்டன. இதனால் வடக்கு கிழக்கில் அதிக ஆசனம் பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி மாறியது.

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக- ஓரணியாக தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஜேவிபியின் அலையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை இலங்கை தமிழ் அரசு கட்சி இல்லாமலாக்கியது. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்தது. இதற்கு தலைமை வகித்தது எம்.ஏ.சுமந்திரன். ஜேவிபி அலையில் அவரும் அடிபட்டு சென்றுவிட்டார்.

உள்ளூராட்சிசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்த பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இதையொட்டி அந்த தரப்பினர் விடுத்த அறிக்கைகளில், தமிழ் தேசிய கூட்மைப்பு தாங்களே என்றும், தமிழ் தரப்பை தாமே பெரும்பான்மையாக பிரதிநிதித்துவம் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டர்.

அது நிலவரம் அல்ல, அவர்களை இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு மாற்றாக பார்க்க தயாரில்லையென்ற செய்தியை தமிழ் மக்கள் தெளிவாக கூறிவிட்டனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், தமிழ் பக்கத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலவீனங்களையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டியிருந்தோம். அந்த தரப்பு தம்மை தாமே உருவகித்த பிம்பத்துக்கும், யதார்த்தத்துக்குமிடையில் பெரிய இடைவெளியிருந்தது. அந்த தரப்பினர், எந்த மாவட்டத்திலும் முழுமையான வலையமைப்பை கொண்டிருக்கவில்லை, ஒரு பிரதேசசபை கட்சியைப் போன்றே உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியிருந்தோம்.

அந்த கட்டுரைகள் வெளியான போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரமுகர்கள் பலர் தமிழ் பக்கத்தை தொடர்பு கொண்டு, திருப்தியின்மையை வெளிப்படுத்தினர்.

ஆனால், அந்த விமர்சனத்தின் உண்மைத்தன்மையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, வன்னி மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆசனத்தை வென்றது. செல்வம் அடைக்கலநாதன் அங்கு மயிரிழையில் வெற்றிபெற்றார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தேர்தலில் வெற்றியீட்டாமல் விட்டதற்கு செயற்பாட்டு ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் பலவீனங்கள் உள்ளன.

செயற்பாட்டு ரீதியிலான பலவீனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள், முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்தவை. தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்த அரசியல் நகர்வுகள் அனைத்தும், இலங்கை தமிழ் அரசு கட்சியை மையமாக கொண்டவை. ஏனைய கட்சிகள், ஆள் எண்ணிக்கைக்கு அந்த கூட்டமைப்பில் இருந்தவை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னரும், அந்த கட்சிகள் எதையும் உருப்படியாக செய்து, தமது ஆளுமையை நிரூபிக்கவில்லை. காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள், அரசியலமைப்பு விவகாரம் என ஸ்கோர் செய்வதற்கு பரந்த களம் விரிந்திருந்த போதும், அவர்களால் எந்த இலக்கையும் தீர்மானித்து, அதை நோக்கி செயற்பட முடியவில்லை.

அவர்களால் அணுகக்கூடியவராக ஜனாதிபதி ரணில் இருந்தும், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையொன்றை முன்னிறுத்தி, தனித்த பேச்சுவார்த்தையொன்றை செய்ய முடியவில்லை.

இலங்கை தழிழ் அரசு கட்சிக்கு தாமே மாற்று என ஊடக பேட்டிகளில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, மக்களை நம்ப வைக்க எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியவில்லை.

கட்டமைப்பு ரீதியிலான பலவீனங்கள் —

இதுதவிர, அந்த கூட்டணியில் எந்த கட்சிக்கும் வடக்கு கிழக்கில் முழுமையான வலையமைப்பில்லை. பெரும்பாலான கட்சிகளுக்கு ஒரு மாவட்டத்திலேனும் முழுமையான கட்டமைப்பில்லை.

அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை, தமிழ் மக்களின் தேசிய விவகாரங்களில் முன்னணியில் குரல் கொடுப்பதில்லையென்ற எதிர்மறை விமர்சனங்களே அதிகமுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலேயே அடிப்படை தவறுகள் உள்ளன. அங்கு 5 கட்சிகள் உள்ளன. இதில் ரெலோ, புளொட் என்பன ஒப்பீட்டளவில் ஓரளவுக்கேனும் வடக்கு கிழக்கில் கட்டமைப்பை கொண்டுள்ளன. (அந்த கூட்டில் உள்ள ஏனைய கட்சிகளை விடவே ஒப்பீட்டளவில் மேம்பட்ட கட்டமைப்பை கொண்டுள்ளன. எனினும், தனித்து செயற்பட போதுமான கட்டமைப்பல்ல). ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சியென்பன தற்போது வெறும் லேபிள் கட்சிகள் மட்டுமே. முன்னர், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தீவிர பேஸ்புக் ஆதரவு தளம் இருந்ததை போல, தற்போது வயதான சில ஈ.பி.ஆர்.எல்.எவ் காரர்கள் வெளிநாடு, உள்நாட்டிலிருந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பியாவார் என, இயேசு வருகிறார் பாணியில் எழுதிக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஒரு காலத்தில் பலமான அணியான ஈ.பி.ஆர்.எல்.எவ் இப்பொழுது ஒரு பிரதேசசபையை கூட கைப்பற்றும் நிலையில் இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் யாரையும் தற்போது மாகாணசபை தேர்தலில் கூட வேட்பாளராக நிறுத்தி, வெல்ல முடியாது என்பதே கசப்பான யதார்த்தம்.

சி.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சியில் மூன்றோ, நான்கு உறுப்பினர்களே உள்ளனர்.

இந்த கட்சிகளின் அண்ணன், தம்பிதான் ஜனநாயக போராளிகள் கட்சி. கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் பூநகரி பிரதேசசபை ஜனநாயக போராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு வேட்புமனுவே தாக்கல் செய்யப்படவில்லை. காரணம், வேட்புமனுவில் ஒப்புக்கு பெயர் எழுதவே, ஊரில் தெரிந்தவர்கள் யாரும் இல்லையென அந்த கட்சியினர் கைவிரித்து விட்டனர்.

கிட்டத்தட்ட ரெலோவுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இதுதான் நிலை. புளொட்டுக்கு கிளிநொச்சி, வவுனியாவில் இதுதான் நிலைமை.

உள்ளூராட்சி தேர்தலில் வட்டார வேட்பாளர்களாக களமிறக்க வேண்டியவர்களை அந்த கூட்டணியினர், நாடாளுமன்ற வேட்பாளர்களாக்கினார்கள்.

சம பங்காளிகள் அல்லாத தரப்பினரை கூட்டணியாக இணைத்து, அவர்களுக்கு சம பங்கில் ஆசனம் பகிர்ந்தது அரசியல் அறிவுள்ள யாரும் செய்யும் செயலல்ல. ஆனால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் அதைத்தான் செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் புளொட் ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்ததுடன், ஓரளவு வாக்கு வங்கியையும் கொண்டிருந்தது. ஆனால், ஆசன பங்கீட்டில் புளொட்டும் இரண்டு ஆசனங்களையே பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சிக்கு தலா 2 ஆசனங்களை ஒதுக்கியது. ஜனநாயக போராளிகளுக்கு 1. இதுவே தோல்வியின் அடிப்படைக் காரணம்.

ஏனெனில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, யாழில் 16 வாக்குகளால் ஒரு ஆசனத்தை இழந்தது. முறையாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தை சுலபமாக பெற்றிருக்கும்.

ஆசனப்பங்கீட்டின் போது, கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்துமாறு ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு கூறப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு யாழ்ப்பாணத்திலேயே வேட்பாளரில்லை. கிளிநொச்சிக்கு யாரிடம் செல்வது?. கிளிநொச்சியில் பொருத்தமான யாருமிருந்தால் சொல்லுங்கள், நாங்களும் பார்க்கிறோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்காளிகளிடம் கூறினார். பின்னர், வேட்புமனு சமர்ப்பிக்கும் நாளுக்கு நெருக்கமாக, தன்னுடன் நெருக்கமாக இருந்த சிவகுமார் என்பவரை அழைத்து வந்து கையொப்பமிட செய்தார். கிளிநொச்சிக்கு அல்லவா அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என கேட்டபோது, சிவகுமாரின் பூர்வீகம் கிளிநொச்சியென சுரேஸ் சொல்லிவிட்டு சென்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சிவகுமார் யாரெனில், உள்ளூராட்சிசசபை தேர்தலில் பருத்தித்துறையில் போட்டியிட்டு வட்டாரத்திலும் வெற்றி பெறாதவர். அவர் 85 வாக்குகளையே அப்போது பெற்றார். அவரை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக்கியது சுரேஸ் பிரேமச்சந்திரனின் பொறுப்பற்ற தனம் என்பதா அல்லது பலவீனம் என்பதை தெரியவில்லை.

இதேபோல, சிறிகாந்தாவின் தமிழ் தேசிய கட்சி, ஜெனார்த்தனன் என்பவரை வேட்பாளராக்கியது. அவரும் யாழ் மாநகரசபை தேர்தலில் வட்டாரத்தில் வெற்றிபெறாதவர். இந்த இருவரும் நாாளுமன்ற தேர்தல் பட்டியலில் தண்டச்சோறுகள். அவர்களால் ஒரு துளி நன்மையும் கிடைக்காது, தோல்வியே கிட்டும் என தமிழ் பக்கம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது. அதுதான் நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியும் இந்த கூட்டணியில் இணையலாம் என்ற நிலைமையிருந்தது. ஆனால், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன அதை எதிர்த்து, தடுத்து நிறுத்தி விட்டன.

காரணம், ஆரம்ப கட்டத்தில் தமக்கு யாழில் 2 ஆசனங்கள் நிச்சயம் கிடைக்கும் என அந்த கூட்டணியினர் நம்பினார்கள். முதலாவது ஆசனத்தை சித்தார்த்தன் பெற்றால், அடுத்ததை தாம் பெற்றுவிட வேண்டுமென அவர்கள் நினைத்தனர். வலுவான தரப்பினரை உள்ளே இணைத்தால், தாம் எம்.பியாக முடியாதென ரெலோவின் சுரேன் போன்றவர்கள் கருதியதால், சந்திரகுமாரை இணைப்பதை எதிர்த்தனர்.

இதேபோல, இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து பிரிந்த ஈ.சரவணபவன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிட விரும்பி, ஒவ்வொரு கட்சியாக சென்று சந்தித்தார். அவர் வருவதையும் சுரேன் எதிர்த்தார். தனது ஆசனம் பறிபோகும் என்ற உள்மன பயமிருந்தாலும், வட்டுக்கோட்டையில் தனது வாக்கும் பறிபோய்விடும் என காரணம் வேறு கூறினார்.

சிறிகாந்தா தரப்பில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜெனார்த்தனனை அணுகிய சரவணபவன், அவரை போட்டியிலிருந்து விலக பேரம் பேசினார். சுமார் 30 இலட்சம் ரூபா வரை பேரம் பேசினார். அத்துடன், ஜெனார்த்தனன் மாகாணசபையில் வெற்றியீட்ட உதயன், டான் ஊடகங்கள் முழுமையாக செயற்படும் என்றும் உத்தரவாதமளித்தார். ஆனால் ஜெனார்த்தனன் அதை கேட்கவில்லை. சிறிகாந்தாவும் கேட்கவில்லை.

இந்த குழறுபடிகளின் மத்தியில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில், யாழில் வேட்புமனுவை இறுதி செய்து ஒப்படைக்கும் பொறுப்பு புளொட்டிடம் இருந்தது. வவுனியாவில் செல்வம் அடைக்கலநாதனிடம் இருந்தது.

வவுனியாவிலும் சிறிகாந்தா தரப்பு இதே போன்ற கோமாளிக் கூத்து ஆடியது. அங்கும் ஒரு வேட்பாளரை நிறுத்துவதாக கூறியது. செல்வம் மறுத்தார். தனது வேட்பாளருக்கு இடமில்லையென்றால், கூட்டணியிலிருப்பதில் அர்த்தமில்லையென சிறிகாந்தா வழக்கமான பாணியில் கூறினார். அப்படியானால், அந்த வேட்பாளரை கையொப்பமிட 10 மணிக்கு வரச்சொல்லுங்கள் என செல்வம் அடைக்கலநாதன் கூறிவிட்டு, 9 மணிக்கே வேட்புமனுவை கையளித்து விட்டார்.

யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தனுக்கும் இவ்வாறே செயற்படுமாறு பல தரப்பினர் ஆலோசனை கூறியுள்ளனர். சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஆளை வெட்டிவிட்டு, கிளிநொச்சியில் ஒருவரை நியமித்து…. சிறிகாந்தாவின் ஜெனார்த்தனனை வெட்டிவிட்டு, சரவணபவனை நியமித்து புதுவேட்புமனு தயாரித்து, கையளிக்குமாறு பல தரப்பினரும் வலியுறுத்தி கூறினார்கள்.

ஆனால், அதை சித்தார்த்தன் செய்யவில்லை. அதற்குரிய துணிச்சல் அவரிடமிருக்கவில்லை.

அப்படி செய்ததால் வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியானார். அப்படி செயற்படாததால் யாழில் சித்தார்த்தன் தோல்வியடைந்தார்.

சிறப்புச் செய்திகள்