பெண்களினால் முன்னெடுக்கப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் சலுகையுடனான ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில், இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு உரிய முறையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என பெண்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்போது, பெண்களினால் முன்னெடுக்கப்படும் வர்த்தக செயல்பாடுகளுக்குரிய வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்களால் வழங்கப்படும் கடன்களில் ஒரு பகுதி பெண்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதற்காக விசேட உபகணக்கு ஒன்றை ஸ்தாபிக்கலாமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பெண் தொழில்முனைவோர் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு வர்த்தக வரிவிலக்கு அல்லது சலுகை அடிப்படையிலான வரி முறைமையினை வழங்க வேண்டும் எனவும் பெண்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணியினை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி போன்ற தொழில்துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.