இம்மாதம் முதல் லண்டனுக்கான விமான சேவையினை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தற்போது இடம்பெறும் லண்டனுடனான வாராந்த நான்கு சேவைகள், எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தவிர, குளிர் காலத்தில் மேலும் ஒரு சேவையினை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கும், மாலைத்தீவிற்குமான சேவை தற்போது, பிரபலமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

லண்டனிலிருந்து இலங்கை ஊடாக மாலைத்தீவு செல்லும் பயணிகளுக்கான உடன் விமான சேவையினை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக விமான சேவைகளின் தலைவர் ஜீ.ஏ. சந்திரசிரி தெரிவித்துள்ளார்.