சர்ச்சைக்குரிய சேதன பசளையை தாங்கிய சீன கப்பல், பேருவளை மற்றும் களுத்துறைக்கு இடையிலான கடல் பரப்பில் இருப்பதாகக் கப்பல் பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிக்கையிடும் மெரின் ட்ரெபிக் (MarineTraffic) இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உரத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகக் கூறப்பட்ட சீன நிறுவனத்திற்கும், அதன் உள்ளூர் முகவருக்கும் பணம் செலுத்துவதை தடுத்து, மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில், குறித்த கப்பல் இலங்கை கடல் பரப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கப்பல் இன்று மாலை 4.30 அளவில், கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென மெரின் ட்ரபிக் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இதுகுறித்து துறைமுக கட்டுப்பாட்டாளரான கெப்டன் நிர்மால் சில்வாவிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதன்போது பதிலளித்த அவர், குறித்த கப்பலானது சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு துறைமுகத்துக்கு வர முடியும் என்றாலும், அதில் உள்ள சட்டவிரோதமானதும், தீங்கு விளைவிக்கக்கூடியதுமான உரத்தை நாட்டில் இறக்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டார்.
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அந்தக் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்குமாயின், உள்ளூர் பிரதிநிதி ஒருவரை நியமித்து, கப்பலின் வருகையைப் பதிவுசெய்து, அதற்கான கொடுப்பனவை செலுத்தி, கப்பலில் உள்ள பொருட்கள் தொடர்பில் அறிக்கையிட்டு, அதன் சான்றிதழையும், சுகாதார சான்றிதழையும் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.
எவ்வாறிருப்பினும் குறித்த கப்பல், இது போன்ற எந்தவொரு செயன்முறையையும் இதுவரையில் செய்யவில்லையெனத் துறைமுக கட்டுப்பாட்டாளர் உறுதிப்படுத்தினார்