மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு!

நாடு முழுவதும் எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறி தொகை தற்போது 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இதற்கு முன்னர் நாளாந்தம் சுமார் 2 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் கிடைக்கப்பெற்றன.

எனினும் தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மரக்கறிகளே கிடைக்கப்பெறுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஆர்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இது வழமையாகக் கிடைக்கப்பெறும் மரக்கறிகளை விடவும் 40 சதவீத வீழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கெப்பிட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்தில் நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 80 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன.

மேலும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 75 சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தக சங்கத்தின் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலை தொடருமாயின் எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழில் 🛒 தாரணி சூப்பர்மார்கெட் ⏰ 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்