மரக்கறிகளின் விலை அதிகரிப்பிற்கான 4 பிரதான காரணங்கள்

மரக்கறிகளின் விலைகள் 4 பிரதான காரணங்களால் நாள்தோறும் அதிகரித்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் – கற்பிட்டி ஆகிய பிரதான மரக்கறி உற்பத்தி வலயங்களில் கடந்த 02 மாதங்களாக நிலவிய கடும் மழையுடனான வானிலை, அவற்றில் முதலாவது காரணமென நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி நாலக்க விஜேசூரிய தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் பதிவான மழைவீழ்ச்சியின் அளவை நோக்கும் போது, சாதாரண நிலையை விடவும் இரு மடங்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் அங்குள்ள பயிர் நிலங்கள் அதிகளவான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில பயிர்ச்செய்கைகள் செய்கை பண்ணப்படும் அளவில் குறைவு ஏற்பட்டுள்ளமை, இரண்டாவது காரணமென சிரேஷ்ட அதிகாரி நாலக்க விஜேசூரிய குறிப்பிட்டார்.

குறிப்பாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கறி மிளகாய் மற்றும் பாகற்காய் உள்ளிட்ட மரக்கறி செய்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிக மழையுடனான வானிலையால் விநியோக வீதம் குறைவடைந்துள்ளமையானது, மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்கின்றமைக்கான மூன்றாவது காரணமென நாலக்க விஜேசூரிய தெரிவித்தார்.

குறிப்பாக நுவரெலியா, பதுளை, ஊவா பரணகம, வெலிமடை, புத்தளம் – கற்பிட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கொழும்பு, தம்புள்ளை மத்திய நிலையங்களுக்கு மரக்கறி விநியோகம் செய்யப்படுகின்றமையானது அதிக மழையுடனான வானிலையால் மிகவும் குறைவடைந்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக கறி மிளகாய், தக்காளி உள்ளிட்ட சில செய்கைகளில் அதிக மழையுடனான வானிலையால் சில நோய்த்தாக்கங்கள் ஏற்படுகின்றமை, மரக்கறிகளின் விலை அதிகரித்து செல்கின்றமைக்கான நான்காவது காரணமென நாலக்க விஜேசூரிய தெரிவித்தார்.

இதனிடையே, மரக்கறிகளின் விலையேற்றம் டிசம்பர் மாதம் வரை காணப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று பிற்பகல் வௌியிடப்பட்ட மரக்கறிகளின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு கிலோகிராம் போஞ்சியின் சில்லறை விலை 500 ரூபா தொடக்கம் 520 ரூபா வரை பதிவாகியுள்ளது.

ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 520 ரூபா தொடக்கம் 560 ரூபா வரை அமைந்துள்ளது. ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 600 ரூபா தொடக்கம் 620 ரூபா வரை பதிவாகியுள்ளது.

ஏனைய மரக்கறிகளின் விலையானது 280 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்