50 போலி சாரதி அனுமதி அட்டைகள், காலாவதியான 361 சாரதி அனுமதி அட்டைகள் உட்பட பல உபகரணங்களை தம்வசம் வைத்து போலி சாரதி அனுமதி அட்டைகளை தயாரித்து, சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மூவர் ஆட்டுப்பெட்டித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்டுப்பெட்டித்தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐந்து போலி சாரதி அனுமதி அட்டைகளுடன் ஆட்டுப்பெட்டித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரனையின்போது, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், போலி சாரதி அனுமதி அட்டைகள் தயாரிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதன்படி, வத்தளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், அங்கு காணப்பட்ட கணனி மற்றும் அச்சு இயந்திரம் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

வத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின்போது கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் அதிகாரியொருவரினூடாக காலாவதியான சாரதி அனுமதி அட்டைகளை விலைக்கு வாங்கி இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவர்கள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட போலி சாரதி அனுமதி அட்டைகளை விற்பனை செய்துள்ளனர், ஒரு சாரதி அனுமதி அட்டை ரூ.13,000 வீதம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com