கொவிட் தொற்றின் பின்னர் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, வல்லரசு நாடுகள் உதவ வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று(04) மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த தொற்றினை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றன கடுமையான சவால்களை சந்தித்துள்ளன.

அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொவிட்-19 தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை சிறந்த வகையில் முன்னெடுத்து செல்வதற்கு, வல்லரசு நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும்.

உலகளாவிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் வேலைத்திட்டத்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலைமைத்துவம் வழங்கி வருகின்ற போதிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு, எந்தவோர் உலக அமைப்பும் உதவ முன்வரவில்லை.

தொற்றுப் பரவலென்பது, வறிய மற்றும் வல்லரசு நாடுகளை ஒரே விதத்தில் பாதிப்படையச் செய்திருப்பினும், விகிதாசாரப் பாதிப்பின் சுமைகளை வறிய நாடுகளே தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது மிகவும் கடினமான சந்தர்ப்பமாகும்.

தொற்று நோயால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு கடன் மன்னிப்பு வழங்கல், மறுசீரமைப்பை மேற்கொள்ளல் அல்லது கடன் நிவாரணக் காலங்களை வழங்க வல்லரசு நாடுகளும் பலதரப்பு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com