புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்

நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற ‘நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை, நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி, நேற்று (31) மாலை 5 மணியளவில் இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.

நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது சவாலாக உள்ளது.

இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் நிலைமை பாரிய பிரச்சினையாக உள்ளது.

இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும், சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது.

அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும்.

அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்ப பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்