நிதியியல் நிறுவனங்கள் மீதான தண்டப்பணங்களை விதித்தல்.

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமையை கருத்திற்கொண்டு தண்டப்பணம் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனராக, நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவற்கு, கீழே குறிக்கப்பட்டவாறு 2021 யூலை 01 தொடக்கம் 2021 செத்தெம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 2.0 மில்லியன் தொகையினை தண்டப்பணமாக சேகரித்தது. சேகரிக்கப்பட்ட தண்டப்பணம் திரட்டுநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது.

1. பீப்பில்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பீஎல்சி

விதிப்புத் திகதி: 2021 யூலை 06

தொகை: இ.ரூபா 1,000,000.00 (ரூ. ஒரு மில்லியன்;)

தண்டப்பணம் விதிப்பதற்கான காரணம்:

ஐக்கிய நாடுகள் அனுமதிப் பரிசோதனைகளின் நடைமுறைகள் தொடர்பிலான 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க, நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகளுடன் இணங்காமைக்காக நிர்வாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் கீழ், குறித்துரைக்கப்பட்ட ஆட்களின் மற்றும் நிறுவனங்களின் முழுமையான பட்டியலை பேணுவதற்கான முறைமைகள் மற்றும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவன விதிகள் மூலம் வேண்டப்பட்டதற்கமைவாக சேவை வழங்கத் தொடங்கும் நேரத்தில் அதன் வாடிக்கையாளராக வரக்கூடியவர்களை பரிசோதிப்பதற்கும், இற்றைப்படுத்தப்பட்ட குறித்துரைக்கப்பட்ட பட்டியல்களில் உள்ளடக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் எவருடனும் எந்தவொரு வியாபார தொடர்பும் இடம்பெறவில்லை அல்லது தொடர்புறவில்லை என்பதை உறுதிசெய்வதற்காக ஏதேனும் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பட்டியல்கள் இற்றைப்படுத்தப்படும் போது, ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர் தளத்தை அல்லது ஏற்கனவேயுள்ள வியாபார தொடர்புகளை பரிசோதிப்பதற்கான ஏதேனும் பொறிமுறையொன்றை நடைமுறைபடுத்துவதற்கும் பீப்பில்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பீஎல்சி தவறியிருந்தது என்பதை தளப் பரிசோதனையின் போது நிதியியல் உளவறிதல் பிரிவு அவதானித்தது.

முறைமைகளிலும் நடைமுறைகளிலும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட போதிலும்; தளப் பரிசோதனையின் போது பீப்பில்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பீஎல்சி மூலமான குறித்துரைக்கப்பட்ட தனியாட்களுடனான அல்லது நிறுவனங்களுடனான வியாபாரத் தொடர்புகளின் நிகழ்வுகள் வெளிப்படுத்தப்படவில்லை. அப்போதிலிருந்து, இனங்காணப்பட்ட குறைபாடுகளை சீர்செய்வதற்காக பீப்பில்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பீஎல்சி நடவடிக்கையை எடுத்துள்ளதுடன்; கம்பனியின் அனுமதிகள், பரிசோதனைச் செயன்முறையை நடைமுறைப்படுத்தல் மீதான கணிசமான மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

2. ஐடியல் பினான்ஸ் லிமிடெட்

விதிப்புத் திகதி: 2021 யூலை 12

தொகை: ரூ. 500,000.00 (ரூ. ஐந்து இலட்சம்)

தண்டப்பணம் விதிப்பதற்கான காரணம்:

ஐக்கிய நாடுகள் அனுமதிப் பரிசோதனைகளின் நடைமுறைகளுடன் தொடர்புடைய 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகளுடன் இணங்காமைக்காக நிர்வாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் கீழ் குறித்துரைக்கப்பட்ட ஆட்கள் மற்றும் நிறுவனங்களின் முழுமையானப் பட்டியலைப் பேணுவதற்கான முறைமைகளை மற்றும் நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கும், இற்றைப்படுத்தப்பட்ட குறித்துரைக்கப்பட்ட பட்டியல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் அல்லது தனியாட்களுடன் எந்தவொரு வியாபாரத் தொடர்புகளும் இடம்பெறவில்லை அல்லது தொடர்புறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் பட்டியல்கள் ஏதேனும் இற்றைப்படுத்தப்படுகின்ற போது, ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர் தளத்தை அல்லது ஏற்கனவேயுள்ள வியாபாரத் தொடர்புகளினை பரிசோதிப்பதற்குமான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவன விதிகளினால் வேண்டப்பட்டவாறு சேவை வழங்கத் தொடங்கும் நேரத்தில் நிறுவனத்தின் வாடிக்கையாளராக வரக்கூடிய அனைவரையும் பரிசோதிப்பதற்கும் ஐடியல் பினான்ஸ் லிமிடெட் தவறியிருந்தது என்பதை நிதியியல் உளவறிதல் பிரிவு தளப் பரிசோதனைகள் போது அவதானித்தது.

தளப் பரிசோதனைகளின் போது, ஐடியல் பினான்ஸ் லிமிடெட் குறித்துரைக்கப்பட்ட தனியாட்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபார தெடர்புகளின் நிகழ்வுகள் வெளிப்படுத்தப்படாத போதிலும், முறைமைகளிலும் நடைமுறைகளிலும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன. அதிலிருந்து, இனங்காணப்பட்ட குறைபாடுகளை சீர்செய்வதற்கு ஐடியல் பினான்ஸ் லிமிடெட் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

3. செலான் வங்கி

விதிப்புத் திகதி: 2021 யூலை 12

தொகை: இ.ரூபா 500,000.00 (ரூ, ஐந்து இலட்சம்)

தண்டப்பண விதிப்பிற்கான காரணம்:

நிதியியல் உளவறிதல் பிரிவிலிருந்தான தகவல்களுக்கான கோரிக்கைகளுடன் உடனடியாக இணங்குயொழுகுவதற்கு நிறுவனமொன்றை இயலுமைப்படுத்தும் முறை மற்றும் வடிவத்தில் பதிவுகளை பேணுதல், வாடிக்கையாளருடனான வியாபாரத் தொடர்புகள் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொடுக்கல்வாங்கல்களின் தொடர்ச்சியான கூர்ந்தாய்வை நடாத்துதல், முறையான இடர்நேர்வுக் கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு வழிமுறைகளை கண்காணித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் செயன்முறையை உறுதிப்படுத்துவதற்காக நடைமுறைகள் மற்றும் முறைமைகளை தாபித்து பேணத் தவறுதல் தொடர்பில் 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டம் மற்றம் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க, நிதியியல் நிறுவனங்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகள் என்பவற்றுடன் இணங்காமைக்காக நிர்வாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது

நிதியியல் உளவறிதல் பிரிவின் இடைநிறுத்தல் கட்டளைக்குட்பட்டு தனியாளுடன் பேணப்பட்ட வங்கித்தொழில் தொடர்புகளை உள்ளடக்க விட்டுவிடுவதன் மூலம் நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 15(2)ஆம் பிரிவின் கீழ் நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் விடுக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல் கட்டளையின் இடைநிறுத்தத்துடன் முழுமையாக இணங்கியொழுகுவதற்கு வங்கி தவறியுள்ளது.

வங்கி, விடுபாடுகளை அதிலிருந்து சரிசெய்துள்ளதுடன் ஏதேனும் அத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாமல் பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பினையும் உறுதிசெய்துள்ளது.

சிறப்புச் செய்திகள்