வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையின் தற்போதைய போக்கிற்கு ஏற்ப அடுத்த மாதத்திற்குள் எரிவாயுவின் விலை குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

விலை குறைந்தவுடன் தமது நிறுவனம் அறிமுகப்படுத்தும் சுயாதீன விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, சேவைகளை வழங்குவதற்காக சுயாதீன விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தும் முதலாவது தனியார் நிறுவனம் தமது நிறுவனமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சுயாதீன விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளும் முறையை ஏற்றுக்கொள்ளும் உலகின் ஒரேயொரு நிறுவனமாக லாஃப்ஸ் திகழும் என்று அவர் கூறினார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து வீட்டு சமையல் எரிவாயுவை நீக்கியுள்ளதாகவும், இதனால் அவ்வதிகார சபையினால் குறித்த உற்பத்திக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் லாஃப்ஸ் நிறுவன தலைவர் மேலும் தெரிவித்தார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com