இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களில் 40க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது.
குறித்த கழிவுகளைக் கொண்டு வந்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கப்பிரிவு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லையென சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கை சுங்கப்பிரிவின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்குப் பதிலளித்த அவர், குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படாமையினால் அது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரினால் சுங்கப்பிரிவுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இதுகுறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையை தொடர்புக்கொள்ள எமது செய்தி சேவை முயற்சித்த போதிலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com