உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிக்க நடவடிக்கை

எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுக்கு தேவையான மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை 5 கட்டங்களின் கீழ் 50 வீதம் செயற்படுத்துவதற்கும் , முதல் இரண்டு ஆண்டுகளில் முதலீட்டு தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதன் போது முதலாம் கட்டத்திற்காக ஒரு மில்லியன் டொலரும் , இரண்டாம் கட்டத்திற்காக 5 மில்லியன் டொலரும் , மீண்டும் 10 மில்லியன் டொலரும் முதலீடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மருந்து தயாரிப்பிற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்தக வலய மட்டத்தில் மருந்து தொழிற்சாலைகளை அமைப்பது மிகவும் பயனுள்ளதாகவும் செலவு குறைந்ததாகவும் இருப்பதனால் இதற்கான உட்கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் வெற்றிகரமானதாக அமையும்.

மூன்றாம் கட்ட தடுப்பூசியின் அறிமுகமானது இலங்கையின் சுகாதார அமைப்பிலும், தடுப்பூசி செயல்முறையிலும் உயர் மட்ட வெற்றியைக் காண்பித்துள்ளது.

சிறுவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டமும் அதே போன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமையால் , வைத்தியசாலைகளில் அநாவசிய நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டன.

கொவிட் தொற்று தீவிரமடைந்த கால கட்டத்தில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டமை மிகவும் பயனுடையதாகக் காணப்பட்டது என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் , ‘ இந்தியாவில் கொவிட் தொற்றின் காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதுவரையில் இந்தியாவின் முழு சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.’ என்றார்.

சிறப்புச் செய்திகள்