வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இம்மாதகாலப்பகுதியில் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபாவைக் கொடுப்பனவு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணயச்சபையினால் ‘உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத்திட்டத்தின்’ கீழ் வெளிநாடுகளிலிருந்து அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாயாக மாற்றப்படும்போது அதற்கான ஊக்குவிப்புத்தொகையாக ஒரு அமெரிக்க டொலருக்கு 2 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 2 ரூபாவிற்கு மேலதிகமாக நேற்று முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிமம்பெற்ற வங்கிகள், சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய வழிமுறைகள் ஊடாக வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்றபோது ஒரு அமெரிக்க டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 8 ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் பணிபுரிவோரால் அனுப்பப்பட்ட பணம் இம்மாதகாலத்தில் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுமாயின், ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் 2 ரூபாய்க்கு மேலதிகமாக தற்போது வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள 8 ரூபாவையும் இணைத்து அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபா கொடுப்பனவு செய்யப்படும்.
இந்த மேலதிக ஊக்குவிப்புத்தொகையை வழங்குவதன் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் எமது நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவை உயர்த்த முடிவதுடன் அதன்மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணிச்சந்தையின் திரவத்தன்மையினை அதிகரிக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி முறைசாரா வழிகளின் ஊடாக இடம்பெறும் பணஅனுப்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மத்திய வங்கியினாலும் ஏனைய சட்ட அமுலாக்கக் கட்டமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மத்திய வங்கி, அதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தம்மைச் சார்ந்திருப்போருக்குப் பணத்தை அனுப்பிவைப்பதற்கு முறைசார் வழிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com