இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைப்பது சீனாவா? மேற்குலக நாடுகளா?

ராஜிய உறவு உலகில் அண்மை காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக ”சீன கடன் பொறி” காணப்படுகின்றது. ”சீனாவின் கடன் பொறியில்” இலங்கை சிக்கியுள்ளதாக பல காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா, கடனை வழங்கி அந்நாடுகளின் பொருளாதார மையங்களை சீனா கையகப்படுத்துவதாக மேற்குலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த குற்றச்சாட்டுக்களை கொழும்பிலுள்ள சீன தூதரகம் நிராகரித்து, மாறுப்பட்ட பதிலொன்றை வழங்கியது.

”மேற்குலக நாடுகளின் கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றி வருவதாக சீன தூதரகம் பதிலளித்தது.

இலங்கைக்கு மாத்திரமன்றி, ஆப்பிரிக்க வளையத்திலுள்ள சில நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் பலவற்றுக்கான கடனை சீனாவே வழங்கியுள்ளது.

”யுகாண்டாவை மூழ்கடித்த சீன கடன் பொறி, இலங்கையையும் மூழ்கடிக்கின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

”சீனாவினால் வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையம் தற்போது அவர்களுக்கு இல்லாது போயுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஒரேயொரு மற்றும் பிரதான நுழைவுவாயில், வேறொரு நாட்டிற்கு உரித்தாகின்றமையானது, யுகாண்டா மக்களுக்கு எந்தளவிற்கு பிரச்சனையான அனுபவமாக இருக்கும்?” என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

”ராஜபக்ஷ ஆட்சியை போன்றே, யுகாண்டாவின் ஊழல் மிகுந்த அரசியல் தலைமைகளின் முன்னுரிமைகள் மற்றும் தேசிய திட்டமொன்று இல்லாது கமிஷன்களை பெற்றுக்கொள்வதற்காக பேராசையுடன் சீனாவிடமிருந்து பெருமளவிலான தொகை கடனை பெற்றுக்கொண்ட திமிர்பிடித்த முடிவின் பெறும்பேறு இது” என அவரது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ராஜிய ரீதியிலான விவகார வரையறைகளுக்கான எல்லையிலிருந்து அப்பால் சென்று, வேறொரு நாட்டின் ”அரசியல் மற்றும் இராணுவ அபிலாஷைகளுக்காக” அந்த முகாமில் இணைவதன் ஊடாக, தமது சொந்த நாட்டின் இறையாண்மையை இழப்பதானது, நாட்டின் தேசிய அபிலாஷைகளை நேரடியாகவே அழிப்பதாகும்” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, நாட்டிற்கு தேவையற்ற திட்டமாக நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், இந்து சமுத்திரத்தின் கடற்படை வழித்தடமாக சீனாவினால் கையகப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”சீனாவின் கடற்படை தளமாகவே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட QUAD நாடுகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அவதானித்து வருகின்றன. இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய பிரச்சினை. முட்டாள் தனமான முடிவுகளின் விளைவாக, எதிர்வரும் 60 – 80 மாதங்களில் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத அதிகார போராட்டத்தில் தவிர்க்க முடியாத விளைவுகளை அனுபவிப்போம்” என, பீல்ட் மார்ஷல் கூறுகின்றார்.

”உரம் ஏற்றிய கப்பல் விவகாரத்தில், சூடுபட்ட பன்றியை போல இலங்கையிலுள்ள சீன தூதரகம் போராடி வருகின்றது. இவ்வாறான சூழலில், எவ்வாறு நடந்துகொள்வது என்பது தற்போது எமக்கு மிகத் தெளிவாக தெரிகின்றது. எதிர்வரும் காலங்களில் இந்த விவகாரத்தை சரி செய்துக்கொள்ள வேண்டும்” என அவர் தனது பதில் தெரிவித்துள்ளார்.

யுகண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு உண்மையில் என்ன நேர்ந்தது?

சீனாவின் பி.ஆர்.ஐ திட்டம் குறித்த விளக்கப்படம்

சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமையினால், யுகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம், அந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து இல்லாது போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன.

யுகாண்டாவிடமிருந்து என்டபே சர்வதேச விமான நிலையம் இல்லாது போவதை தவிர்க்கும் வகையில், சீனாவுடன் 2015-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள யுகாண்டா முயற்சித்து வருவதாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்டபே சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்காக, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து யுகாண்டா, $200 மில்லியன் கடனாக பெற்றதாகவும், அந்த கடன் நிபந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம் என, யுகாண்டா அரசாங்கத்தின் பிரதம சட்ட அதிகாரி, அந்த நாட்டு நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ப்ளும்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், யுகாண்டாவின் என்டபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை, கொழும்பிலுள்ள சீன தூதரகம் மறுத்துள்ளது.

இந்த செய்தியில் ”உண்மை இல்லை” என சீன தூதரகம் தெரதிவித்துள்ளது.

”சீனா, யுகாண்டாவின் விமான நிலையத்தை கையகப்படுத்தியுள்ளது” என அப்பட்டமான பொய்யை யுகாண்டா சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊடகப் செய்டித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம், டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

”கடன் பொறி” தொடர்பிலான கதை மேற்குலக காலனித்துவத்துடன் மாத்திரமே உருவானது. இலங்கையில் இதனை மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகின்றது” என அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை சீன கடன் பொறிக்குள் சிக்கவில்லை என இலங்கை அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்திருந்தனர்.

பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவிகளை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் மைக் பாம்பியோவை, 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்த வேளையில் தெரிவித்திருந்தார்.

இதன் பெறுபேறாக, இலங்கை கடன் பொறிக்குள் சிக்கவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

சீனாவின் கடனில் தங்கியிருக்க வேண்டுமா? சர்வதேச பன்னாட்டு நிதியத்தின்(IMF) உதவிகளை பெற முடியாதா?

சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF) ஒத்துழைப்புக்களை பெறும் போது, இலங்கைக்கு தேவையற்ற நிபந்தனைகள் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

”சர்வதேச நிதியத்திடம் செல்வதானது, மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துமாறு அவர்கள் கூறுகின்றனர். அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். அரச செலவீனங்களை குறைக்க வேண்டும் என அவர்கள் கூறுவார்கள்” என அமைச்சர் தெரிவித்தார்.

”தற்போதுள்ள நலன்புரி திட்டங்கள், சமுர்த்தியாக இருக்கலாம். வேறு திட்டங்களாக இருக்கலாம். அவற்றை நிறுத்துமாறு கூறக்கூடும். இவ்வாறான அனைத்து விடயங்களுக்கும் இந்த நாட்டு மக்கள் விருப்பமாக இருந்தால், சர்வதேச நிதியத்திடம் எம்மால் செல்ல முடியும். சர்வதேச நிதியத்திடம் செல்லுங்கள் என கூறுவது இலகுவான விடயம். அங்கு சென்றதன் பின்னர், சர்வதேச நிதியம் விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றும் போதே தெரியும், தமக்கு தாமே குழி வெட்டிக் கொண்டோம் என்று” என அமைச்சர் மேலும் கூறினார்.

எனினும், அவ்வாறான நிபந்தனைகள் எதுவும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இதன்போது பதிலளித்தார்.

”நிபந்தனைகள் எதுவும் கிடையாது. அரச ஒழுக்கம் தொடர்பிலான நிபந்தனைகள் மாத்திரமே அங்கு காணப்படுகின்றன. அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

”சர்வதேச நாணய நிதியத்திடம் ஏன் செல்ல முடியாது என கூறுகின்றீர்கள்? தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர். நிபந்தனைகள் விதித்தால், மக்களுக்கு சிரமம் ஏற்படும் என கூறுகின்றார்கள். நிவாரணங்களை இல்லாது செய்ய வேண்டுமாம். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ என்ன செய்தார்? உர மானியத்தை அவர் இல்லாது செய்தார் அல்லவா? சர்வதேச நிதியம் செய்யும் என கூறியதையே அவர் செய்தார் அல்லவா? நீங்கள் கூறுவதையே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ செய்தார்.” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளிநாட்டு கடன்

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு கடன் தொடர்பிலான சாராம்சத்தின் பிரகாரம், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் முழு கடன் நிலுவை தொகையாக $35.1 பில்லியன் காணப்படுகின்றது.

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை $981.0 மில்லியன் கடன் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்பட்ட கடனில் $520.6 மில்லியன், அடிப்படை கடனை மீள செலுத்துவதற்காகவும், எஞ்சிய $460.4 மில்லியன் வட்டியை செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட, வெளிநாட்டு கடன் சாரம்சத்தை மேற்கோள்காட்டி, இலங்கையின் கடன் சாரம்சத்தை கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. ”வேறொரு வசனத்தில் கூறுவதென்றால், மேற்குலக நாடுகளின் ”கடன் பொறியிலிருந்து” இலங்கையை சீனாவே காப்பாற்றியது” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கைக்கு பிரதான கடன் வழங்குநர்களின் விபரங்கள்:

01.வர்த்தக கடன் பெறுகின்றமை அல்லது சர்வதேச சாவரின் பத்திரங்கள் (ISB) 47%

02.ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) – 13%

03.சீனா – 10%

04.ஜப்பான் – 10%

05.உலக வங்கி – 9%

சீனாவின் அழுத்தங்களுக்கு சவால் விடுக்க ஐரோப்பாவிலிருந்து பில்லியன் யூரோ திட்டம்

ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக பாரியளவிலான நிதி உதவிகள் மற்றும் கடன் வசதிகளை சீனா வழங்கியுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, கோவிட் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார வசதிகளை சீன வழங்கியுள்ளது.

இந்த பின்னணியில், சீனாவின் திட்டத்திற்கு எதிர் திசையில், சர்வதேச அளவிலான முதலீட்டு திட்டத்தை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகின்றது.

அதனூடாக, டிஜிட்டல், போக்குவரத்து, காலநிலை, மின்சக்தி தொடர்பிலான திட்டங்கள் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்பிரிக்கா மற்றும் வேறு வளையங்களில், சீனாவின் அழுத்தங்களுக்கு எதிராக மேற்குல நாடுகளின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் 300 பில்லியன் யூரோ முதலீடு செய்யப்படுகின்றது.

இதேவேளை, ஆசிய வளையத்தில் சீனாவின் அழுத்தங்களை தவிர்க்கும் வகையில், இந்தியாவினால் புதிய முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக, இந்தியா பொருளாதார நிவாரண பொதியொன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, திருகோணமலை எண்ணெய் களஞ்சியசாலை அபிவிருத்தி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருள் இறக்குமதி மற்றும் இலங்கைக்கு நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன்: ஆதிக்கம் செலுத்தவா? உதவி செய்யவா? 19 ஆகஸ்ட் 2021
bbctamil


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்