CEAT களனி ஹோல்டிங்க்ஸ் இலங்கையில் போலேரோ சிட்டி பிக்அப்புக்களுக்கான அசல் உபகரணங்களை தயாரிப்பவர்களுக்கான நியமனத்தை பெற்று அதன் உள்நாட்டு ரேடியல் டயர் உற்பத்தியில் இன்னுமொரு மைல்கல்லை அடைந்துள்ளது.

இந்த போலேரோ சிட்டி பிக்அப் வாகனங்கள் மஹிந்திரா & மஹிந்திரா இந்தியா நிறுவனம் மற்றும் ஐடியல் மோட்டர் சின் கூட்டுச் சேர்க்கையின் மூலம் இலங்கையில் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன.

இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒரு OEM உடன்படிக்கையின் அடிப்படையில் மத்துகம, வெலிப்பென்னையிலுள்ள மஹிந்திரா ஐடியல் லங்கா ஓட்டமொட்டிவ் பொருத்து மையத்தில் பொருத்தித் தயாரிக்கப்பட்டு பாவனைக்கு வரும் அனைத்து மஹிந்திரா போலேரோ சிட்டி பிக்அப்புக்களுக்கும் களனியிலுள்ள CEAT களனி டயர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 215/75 R15 அளவுடைய CEAT Milaze HD ரேடியல் டயர்களே பொருத்தப்படும்.

CEAT ஏற்கனவே இந்த வருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொருத்தி உருவாக்கப்படும் 36 வாகனங்களுக்கான அதி உயர் செயற்பாட்டுத்திறன் கொண்ட 180 ரேடியல் டயர்களை வழங்கியிருப்பதோடு, மஹிந்திரா ஐடியல் லங்கா இணை உருவாக்கத்தினால் இலக்குவைக்கப்பட்டுள்ள, மாதாந்தம் அதிகபட்சமாக தயாரிக்கப்படும் 144 வாகனங்களுக்கு 2022 ஜனவரி முதல், மாதந்தோறும் 720 டயர்கள் வரை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

CEAT களனி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ரவி டட்லானி இந்த உடன்படிக்கை பற்றிக் குறிப்பிடும்போது ´மஹிந்திரா மற்றும் ஐடியல் மோட்டர்ஸ் கூட்டுருவாக்கத்தின் உள்ளுர் பெறுமதி சேர்ப்பின் முயற்சிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சியடைவதோடு, எம்மால் செய்ய முடியுமானதில் மிகச்சிறந்ததான – உள்நாட்டு தன்மைகளுக்கு ஏற்றதாக வடிமைக்கப்பட்டு, நுட்பமாக உருவாக்கப்பட்ட உயர்தரமான டயர்களை உற்பத்தி செய்வதன் மூலம், வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நல்குகிறோம். கடந்த இரு தசாப்தகாலமாக, CEAT ´இலங்கையின் தயாரிப்பு´ என்பதற்கு ஈடான நற்பெயரை டயர் தொழிற்துறையில் கட்டியெழுப்பியதுடன், இலங்கையில் வாகனங்களை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளுக்கான மஹிந்திரா மற்றும் ஐடியல் மோட்டர்சின் உயர்ந்த கனவுகளுக்கு, தனிச்சிறப்பான டயர் வழங்குனராக ஆதரவளிப்பதில், நாம் மிகுந்த பெருமையடைவதுடன் நன்றிக்குரியவராகவும் இருக்கிறோம்.´ எனவும் குறிப்பிட்டார்.

வரையறுக்கப்பட்ட மஹிந்திரா ஐடியல் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு நளின் வெல்கம ´இந்தப் புதிய முன்னெடுப்பு சரியான திசையில் எடுத்து வைக்கப்பட்ட ஒரு அடியாக அமைவதோடு, சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து தயாரிப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின் நகர்வான அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பை ஆதரிப்பதாகவும் அமையும்,´ எனக் குறிப்பிட்டார்.

மஹிந்திரா போலேரோ சிட்டி பிக்அப்புக்களுக்காக, CEAT களனி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் CEAT Milaze டயர்கள், மேம்பட்ட வெப்ப வெளியேற்றத்துக்கான பரந்த பக்கவாட்டு வளைவுகளையும், வெட்டுக்களையும் துண்டுத்துகள்களையும், தாக்குப்பிடிக்கக்கூடிய அகலமான சுற்றளவு வளைவுகளையும் கொண்டுள்ளது. வளைவுகளுடைய குறுக்குவாட்டு முளைகளும் பிளவுகளும் மேம்படுத்தப்பட்ட பிடிமானத்தையும் சீரான தேய்மானத்தையும் வழங்க, வளைவான முனைப்பான நான்கு முனை உயர்வான தளப்பிரதேச வடிவமைப்பு, டயரின் நீண்ட கால ஆயுளையும் நீடித்த உழைப்புத்திறனையும் தருகின்றன.

OEM பகுதிக்கு புதியவரல்லாத CEAT களனி ஹோல்டிங்க்ஸ் இலங்கையில் பொருத்தித் தயாரிக்கப்படும் மஹிந்திரா KUV100 கச்சிதமான SUV களுக்கு தனிச்சிறப்பான அசல் உபகரண டயர் வழங்குனராக 2019 இலிருந்து இருந்து வருகிறது. உள்நாட்டிலே பொருத்தி உருவாக்கப்படும் அனைத்து மஹிந்திரா KUV100 வாகனங்களும் CEAT FUELSMARRT 185/60 R டயர்கள் பொருத்தப்பட்டவையே ஆகும். CEAT களனி ஹோல்டிங்க்ஸ் மிக வெற்றிகரமான இலங்கை – இந்திய கூட்டு வியாபார முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டிணைப்பின் மொத்தக் கூட்டுத்தொகையானது, ஜனவரி 2018 இல் தொகுதிகளின் விரிவுபடுத்தல், தொழிநுட்ப மேம்படுத்தல் மற்றும் புதிய உற்பத்தி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக முதலிடப்பட்ட மூன்று பில்லியன் ரூபாய்களையும் உள்ளடக்கியதான இன்றைய திகதியில் எட்டு பில்லியன் ரூபாய்களாகும். இலங்கையிலே இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள், காற்றடைக்கும் ரேடியல் டயர்கள் (பயண கார்கள், வான்கள் மற்றும் SUV கள்), வர்த்தக ரீதியான (நைலோன் மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனப் பிரிவு டயர்களையும் உள்ளடக்கியுள்ளது.

CEAT தரமுத்திரையானது இலங்கையில் சந்தைப் பங்குகளில், ரேடியல் டயர் பிரிவுகளில் 48 சதவீதத்தையும், ட்ரக் டயர் வகைகளில் 80 சதவீதத்தையும், இலகு ரக ட்ரக் வகை டயர்களில் 84 வீதத்தையும், முச்சக்கர வண்டி டயர்களின் பிரிவின் 51 வீதத்தையும், மோட்டார் சைக்கிள் டயர்களின் பிரிவில் 36 சதவீதத்தையும் விவசாயத்துறை வாகனங்களின் டயர்களின் 72 சதவீதத்தையும் தன்வசம் கொண்டுள்ளது. CEAT களனி தனது உற்பத்தியில் 20 சதவீதமளவில் தெற்காசிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு, ஆபிரிக்க மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com