இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (13) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜபக்ஷ, அந்நாடுகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாகத் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்துடனும் (IMF) தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நிலவும் டொலர் நெருக்கடி தொடர்பில் இந்த சந்திப்பின் போது தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறுமாறு பல அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஏனையோர் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றால் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமல் நட்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்