நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வீழ்ச்சி

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

நாட்டில் கொவிட்-19 நோய் பரவல் இரண்டாம் அலை காரணமாக, 2020 நவம்பர் மாதத்தில் மொத்த ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 747.5 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்ததாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

“கொவிட்-19 நோய் பரவல் இரண்டாம் அலை காரணமாக, ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், விவசாயசார் ஏற்றுமதிகளான தெங்குசார் உற்பத்திகள், கறுவா போன்ற வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்டதை விட 2020 நவம்பர் மாதத்தில் அதிகரித்துக் காணப்பட்டது” என, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தவிசாளர் சுரேஷ் டி மெல் தெரிவித்தார்.

ஆடை ஏற்றுமதிகள் 32 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 483 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்ததுடன், தேயிலை ஏற்றுமதியும் 5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

இறப்பர், இறப்பர் உற்பத்திகள் 12.6 சதவீதமாக அதிகரித்து, 69.7 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தன. காற்று டயர்கள் (8.11 சதவீதம் உயர்வு), தொழிற்துறைசார், சத்திரசிகிச்சைசார் கையுறைகள் (39 சதவீதம் உயர்வு) இதில் அதிக பங்களிப்பை வழங்கியிருந்தன.

தெங்குசார் உற்பத்திகள் நவம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. தேங்காய் எண்ணெய் 50 சதவீதத்தால் உயர்வடைந்ததுடன், தேங்காய் 14.2 சதவீதத்தால் உயர்வடைந்திருந்தது.

வாசனைத் திரவியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் போன்றன 40.64 சதவீதத்தால் அதிகரித்து 34.02 டொலர்களாக பதிவாகியிருந்தன.

இலங்கையின் பிரதான 10 ஏற்றுமதிச் சந்தைகளுக்கான பெறுபேறுகள் நவம்பர் மாதத்திலும், 2020 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியிலும் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.

2020 நவம்பர் மாதத்தில் அமெரிக்கா 178.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்திருந்தது. இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாகியிருந்த 266.91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களுடன் ஒப்பிடுகையில் 33.21 சதவீத வீழ்ச்சியாகும்.

2020 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையிடமிருந்து அமெரிக்கா 2,267.48 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. ஐக்கிய இராஜ்ஜியம் 842.80 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்தியா 546.49 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜேர்மனி 59.07 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இத்தாலி 406.81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்திருந்தன. இவை முதல் பதினொரு மாதங்களில் பதிவாகியிருந்த மொத்த ஏற்றுமதியில் அரைப்பங்குக்கும் அதிகமான தொகையாகும்.

மேற்படி பிராந்திய நாடுகளைத் தவிர்ந்து, 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 நவம்பர் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம், தெற்காசியா, ASEAN, CIS, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் முறையே 12.71, 23.85, 43.11, 3.58 மற்றும் 29.35 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தன.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)