மின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்

மின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அவ்வகையில், எதிர்வரும் ஓகஸ்டில் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் மூலம் 120 மெகாவொட்ஸ் மின்வலுவை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தில் மேலும் பல மின்னுற்பத்தித் திட்டங்கள் அமுலாக உள்ளன. இதன்மூலம் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

உமா ஓயா மின்வலு உற்பத்தி நிலையம் பிரத்தியேகமானது. இது நிலத்தின் கீழ் அமைந்துள்ள மின்னுற்பத்தி நிலையமாகும்.

உலகில் இது போன்ற மின்னுற்பத்தி நிலையங்கள் மிகவும் குறைவு. உமா ஓயா திட்டத்தின் மூலம் இரு போகங்களிலும் 6 ஆயிரம் ஹெக்டெயர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளலாம் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மேலும் தெரிவித்தார்.