அபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்! – IMF எச்சரிக்கை

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார உற்பத்திகள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய பொருளாதார உற்பத்தியானது கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 வீதமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அந்தவகையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பொருளாதார வளர்ச்சி செல்லுமானால் 2020ஆம் ஆண்டு 3.6 வீத வளர்ச்சியினையே எதிர்பார்க்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.3 வீதமாக அமைந்துள்ளதுடன் ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 0.1 வீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு 6.1 வீதமாக காணப்படும் எனவும் அறிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் நிதிக்கொள்கையின் வரிகுறைப்புக் காரணமாக அதன் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.