தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய தீர்மானம்

தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அலகொன்றை 25 ரூபா வீதம் 500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தினூடாக அலகொன்றுக்கு 37 ரூபா வீதம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனைவிட, குறைந்த விலையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாளை மறுதினம் (10ஆம் திகதி) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீட்டுப் பாவனைக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

கைத்தொழில் துறைக்கான மின்கட்டண திருத்தம் குறித்து தற்போது ஆராயப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.