கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்தது ரிசேர்வ் வங்கி

மத்திய ரிசேர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி வீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசேர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று (வியாழக்கிழமை) கூடியது. இக்குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள், வட்டி வீதத்தை 0.25 சதவீதம் குறைப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, வங்கிகளுக்கு ரிசேர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி வீதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 6.25 சதவீதத்தில் இருந்து 6.00 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிசேர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி வீதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

கடந்த பெப்ரவரியில் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசேர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி வீதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசேர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி வீதம் (ரிவேர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ வட்டி வீதம் 6.25 சதவீதமாக குறைந்தது.

இதையடுத்து இன்றைய நிதிக்கொள்கைக் கூட்டத்தில் மேலும் 0.25 சதவீத வட்டிவீதக் குறைப்பு இடம்பெற்றுள்ளது.

ரிசேர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால் வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.