மற்றுமொரு முக்கிய பணிப்புரை

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண்ணையாளர்களை இணைத்து திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புல் வகைகளை வளர்த்தல், கறவை பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தி விரைவாக இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் வருடாந்த பால் தேவையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

போசனையுள்ள சுத்தமான பசும்பாலை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இதன் காரணமாக மக்களுக்கு கிடைப்பதில்லை.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான கறவை இனங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உயர் தரம்வாய்ந்த புல் வகைகளை வளர்த்தல் மற்றும் பசுக்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்வது குறித்தும் விரிவாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.

விலங்கு பண்ணைகளை அண்மித்த சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தலையிட வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதனை பண்ணையாளர்களுக்கு சுமையாக ஆக்கிவிடக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.