தரிசு வயல் காணிகளில் ஊடு பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதி

விவசாய அபிவிருத்தி திணைக்களத்துக்கு பல வருடங்களாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்தில் கொண்டு சிரமங்களின் காரணமாக உரிய வகையில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத தரிசு வயல் காணிகளில் வேறு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரி தொடக்கம் இந்த நடவடிக்கைக்கான அனுமதியை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்து இருப்பதுடன் அதற்கான சுற்றுநிரூபம் தற்பொழுது வெளியிடப்பட்டு இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த சுற்றுநிரூபத்துக்கு அமைவாக 10 போகங்களில் உற்பத்தி செய்யப்படாத தரிசு வயல் காணிகளில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் விசேட அனுமதி இன்றி எத்தகைய ஊடு பயிர்ச்செய்கையையும் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மிளகு, மரவள்ளி போன்றவற்றின் உற்பத்தியை மேற்கொள்வதற்கும் மலர் உற்பத்தி, கால்நடை, நன்னீர் மீன் உற்பத்தி போன்றவற்றை (Green Houses) மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தகைய காரணங்களைக் கொண்டும் இவ்வாறான காணிகளில் மண் போட்டு நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இறப்பர், தெங்கு போன்ற நிரந்தர உற்பத்திக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பழவகை போன்றவற்றின் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை குறைத்து நாட்டில் இவற்றில் தன்னிறைவை காண்பதே இதன் நோக்கமாகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அனைத்து மாவட்டங்களிலுமுள்ள விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள், விவசாய அபிவிருத்தி பிராந்திய அதிகாரிகள் மற்றும் விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உதவியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்தே உங்கள் பெற்றோருக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா? பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள்! hi2world.com