வரிகளைக் குறைப்பதால் மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா?

சந்தை வட்டி வீதத்தை தீர்மானிக்கும் தமது கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

தொடர்ந்தும் தளம்பல் நிதிக்கொள்கையைப் பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையொன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய வங்கி தமது கொள்கை வட்டி வீதத்தை குறைத்தல் உள்ளிட்ட சந்தை வட்டி வீதம் குறையும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தது.

எவ்வாறாயினும், இதனூடாக சந்தை வட்டி வீதம் குறைவடைந்ததுடன், எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை நெருங்க முடியாமற்போனது.

கடன் சலுகை நடைமுறை தொடர்பில் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், வங்கி நிறைவேற்றதிகாரிகள் சங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் நேற்று (28) கலந்துரையாடினார்.

இதன்போது, சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக பிரதமரின் பொருளாதார ஆலோசகரான அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.

தற்போது கொடுப்பனவுகள் செலுத்தப்படாத வணிகக் கடன்களுக்கு ஒன்றரை வருடத்திற்கு வட்டியை மாத்திரம் செலுத்துவதற்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்தல், அந்த சலுகைக் காலத்தின் பின்னர் வழங்கப்பட்ட கடனை மீள செலுத்துவதற்கு வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தல் ஆகிய யோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

அஜித் நிவாட் கப்ரால் கூறும் வகையில், இந்த யோசனைகள் எதிர்வரும் நாட்களில் மத்திய வங்கியின் அனுமதிக்காக அனுப்பப்படவுள்ளன.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துடன் இறக்குமதி வரி குறைக்கப்பட்டமை, எரிவாயு, பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டமை ஊடாக அரச வருமானம் குறைவடைந்ததுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் அரச செலவீனமும் அதிகரித்தது.

வரவு செலவுத் திட்டத்திற்கான வெற்றிடத்தை எதிர்நோக்கும் வகையில் வீட்டு வரி, கெசினோ நிறுவனங்களுக்கு வரி விதித்தல் போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டாலும், அவை பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரச வருமானம் குறைவடைந்தமையின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டது.

இவ்வாறான விடயங்களால், சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுடன் கடனைப் பெறுவதைத் தவிர வேறெந்த மாற்று வழிமுறையும் இல்லாத நிலை உருவானது.

அரச வருவாயை அதிகரித்துக்கொள்வதற்கான தேவைக்கமைய நாணய நிதியம் சுட்டிக்காட்டிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு வருவாய் சட்டமூலத்தை கடந்த அரசாங்கம் நிறைவேற்றியது.

இந்த சட்டமூலத்தின் பிரதிபலனாக மக்களுக்கு அதிக வரிச்சுமை ஏற்படுத்தப்பட்டது என்பது பெரும்பாலான நிபுணர்களின் நிலைப்பாடாகும்.

இந்த விடயங்களையே கடந்த காலங்களில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியது.

நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதார முறையைத் தயாரிப்பதாயின், நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கமைய செயற்படக்கூடாது என்பதை நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

வேறு வலய நாடுகளுக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்ட வரி அல்லது பொருளாதார முகாமைத்துவ பிரேரணைகளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சித்தது.

இதன் பிரதிபலனாக 2015 ஆம் ஆண்டு வரை குறைந்த வீதத்தில் காணப்பட்ட பெரும்பாலான வரிகளில் அதிகரிப்பு ஏற்பட்டது.

15 வீத வெட் வரியை எதிர்நோக்கிய மக்கள் மற்றுமொரு வகையில் தேச நிர்மாண வரியையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வரி செலுத்தப்பட வேண்டிய வருவாயின் அளவு மற்றும் வீதம் ஆகியன கடந்த ஆட்சியின் இறுதிக்காலப்பகுதியில் மிக உயர் மட்டத்தில் காணப்பட்டன.

வரியைக் குறைத்து மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமையை ஓரளவேனும் குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை நியூஸ்ஃபெஸ்ட் பாராட்டுகின்றது.

எனினும், வரிகளைக் குறைப்பதனூடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா?

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் கடந்த காலங்களில் தடைப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கமைய முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு நிதிப் பலத்தை வழங்கிய அபிவிருத்தி வங்கி நடைமுறை நாட்டிலிருந்து நீக்கப்பட்டது.

இந்த வங்கி முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தி முயற்சியாண்மையாளர்கள், வர்த்தகர்களைப் பலப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தி நடைமுறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலம் தற்போது உதயமாகியுள்ளது.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய விடயமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பு, வெறுப்புகளுக்கு அமைய செயற்படுவதை விடுத்து, வரிகளை மாற்றியமைத்து மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வகையில் உற்பத்தி பொருளாதாரத்தை நாட்டிற்குப் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

(விளம்பரம்) உலகில் எந்தப் பாகத்தில் இருந்தும் இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளுக்கு உதவி செய்யலாம் hi2world.com ஒன்லைன் ஷாப்பிங் ஊடாக