சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

48 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா வழங்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தியா, சீனா உள்ளிட்ட 48 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, சீனா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், இந்தியா, இந்தோனேஷியா, ஐஸ்லாந்து, இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைதரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

இதனைத் தவிர ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, சிங்கப்பூர், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இவ்வாறு இலவச விசாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.