இலங்கை 46 நாடுகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா

இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை, 39 நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஏற்கனவே, இந்தத் திட்டத்திற்குள் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், தற்போது இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் அரசாங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பிரித்தானியா, தாய்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, சுவிற்ஸ்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திர விசா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத்தடைகளை, ஏனைய நாடுகள் விலக்கிக் கொண்டிருந்தாலும், ரஷ்யா மட்டும் அதனை இன்னமும் நடைமுறையில் வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுதந்திர வருகை நுழைவு விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், ரஷ்யாவும் இலங்கைக்கான பயணத் தடையை விரைவில் விலக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.