தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சந்தைவாய்ப்பை வழங்கியுள்ள வர்த்தக கண்காட்சி

சீனாவின் ஒரே பாதை மற்றும் மண்டலம் முயற்சியின் கீழ், சீனாவுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான கூட்டுறவை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த வர்த்தக கண்காட்சி ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான வர்த்தக கண்காட்சியின் தொனிப்பொருள் நாடு என்ற பாத்திரத்தினை இலங்கை வகித்திருந்ததோடு, விருந்தினர் நாடாக கம்போடியா பங்கேற்றிருந்தது.

‘ஒரு சிறந்த நுழைவாயில் மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சி, செழிப்புக்கான அதிகார மையம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றிருந்த வர்த்தக கண்காட்சியில் 74 நாடுகள் பங்கேற்றிருந்ததோடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 3348 நிறுவனங்களும் கலந்துகொண்டிருந்தன.

பிரதானமாக ஆறு கண்காட்சி வலயங்கள் உருவாக்கப்பட்டிருந்ததுடன், 17 அரங்குகளில் 7500இற்கும் அதிகமான காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் சார்பில் 100இற்கும் அதிகமான காட்சிக்கூடங்களும், இந்தியாவின் சார்பில் 240 காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

குன்மிங்கின் வர்த்தக கண்காட்சிக் கூடத்தின் பிரதான அரங்கில் நடைபெற்ற இக்கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் தலைமை தாங்கிய யுனான் மாகாண ஆளுநர் அருவான் செங்ஃபா, சீனாவுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்த கண்காட்சி முக்கிய அடித்தளமாக இருக்கும். இது சீனாவுக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்குரிய வாய்ப்பை மேம்படுத்துகின்றது என்றார்.

அதேநேரம், யுனானின் துணை ஆளுநர் ஜாங் குஹவா, சிறந்த போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் எல்லை தாண்டிய கூட்டுறவு திட்டங்களின் உதவியுடன் யுனான் மாகாணம், தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கைகோர்ப்பதற்கு திறந்த மனநிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேநேரம், இலங்கைக்கான குழுவிற்கு தலைமை தாங்கும், அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரதி அமைச்சர் நளின் பண்டார உரையாற்றுகையில், இலங்கையின் தொழில் முயற்சியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வெளிப்படுத்தவும் புதிய ஏற்றுமதி சந்தைகளை ஆராயவும் இந்தக் கண்காட்சி ஒரு சாத்தியமான தளமாக அமைகின்றது.

இந்தக் கண்காட்சி பொருளாதார ரீதியாக வலுவான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமிடும் அதேவேளையில் சீன மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் புதிய அத்தியாயத்தினையும் எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு இலங்கை சீன சுற்றுலாப் பயணிகளின் பிடித்தமானதும், பிரபல்யமானதுமான வெளிநாடாகவும் மாறியுள்ளது என்றார்.

இதேவேளை, சார்க் நாடுகளின் கைத்தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவர் ருவான் எதிரிசிங்க கூறுகையில், சீனா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளின் வர்த்தக பொருட்;களைக் கொண்ட இந்தக் கண்காட்சியுடன் சீனா மற்றும் தெற்காசியா இடையேயான பொருளாதார பரிமாற்றங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலைமையானது அண்மைய நாடுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதற்கு வித்திட்டுள்ளது.

தெற்காசியா ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சீனா நிதி மற்றும் தொழில்துறை, தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றது. எனவே, பொருளாதார ரீதியாக நோக்குகின்றபோது இரு தரப்பினரும் கூட்டுறவு திறனுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. சீன நிறுவனங்கள் தெற்காசியாவில் முதலீடு செய்வதற்கான முன்னுரிமைக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும். 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தக கண்காட்சியானது ஆண்டு தோறும் நடைபெற்று வரும் அதேநேரம் முதன்முதலாக இந்த ஆண்டு தெற்காசிய நாடுகளுக்காக ஒரு தனி பொருட்கள் காட்சிப் பகுதி இம்முறை உருவாக்கப்பட்டுள்ளமை விசேடமானதாகும் என்றார்.

கண்காட்சியின் அதிதிநாடான கம்போடியாவின் வர்த்தக அமைச்சின் வெளியுறவுத்துறை செயலர் சூவோன் தாரா, ஒரே மண்டலம் மற்றும் பாதை முயற்சியாது சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை வழங்குகிறது, சர்வதேச பரிமாற்றங்களை மேம்படுத்துகிறது, உலகளாவிய பொருளாதார அமைப்பை உருவாக்க உதவுகிறது மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கிறது என்று தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுனான் மாகாணத்தின் சுங்கத்திணைக்கள தகவல்களின் பிரகாரம் அம்மாகாணத்திற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 75.4சதவீதமாக(1.5பில்லியன் யுவான்) காணப்படுகின்றது. அத்துடன் 2018ஆண்டு சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதியானது 10.5சதவீதமாக காணப்பட்டுள்ளதோடு, அதன்தொகை 140.1பில்லியன் யுவான் என்பது குறிப்பிடத்தக்கது.