மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் திட்டம் இல்லை: நிதி அமைச்சு

மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்துவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நிதி அமைச்சு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

வங்கிக்கணக்கு உரிமையாளர்களுக்கு பங்குகளை வழங்குவதாகக் கூறி, மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்குப் புறம்பானது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வங்கியை வளர்ச்சியடைச் செய்தல் மற்றும் கடன் வழங்கலூடாக வங்கிக்கு நிதியை சேகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது, மக்கள் வங்கி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தின் நோக்கம் என நிதி அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மக்கள் வங்கியின் பங்குகள், அதில் ​சேவையாற்றுவோர் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் அதன் பின்னர் வௌியார் எவருக்கும் பங்குகள் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் அபாய நிலைமை குறைவடையவில்லை என வங்கி சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மூலதனத்தை அதிகரிப்பதற்கு கடன் பத்திரத்தை விநியோகிக்கும் நிபந்தனைகள் என்னவென தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடன் பத்திரங்களை தேவையான போது பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியுமான விதத்தில் நிபந்தனைகளை விதித்திருந்தால் அது பாரதூரமான நிலைமை எனவும் வங்கி சேவை தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு மேலதிகமாக மீள செலுத்தும் காலவரை மற்றும் அது தொடர்பிலான விடயங்களை தௌிவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, நூறு வீதம் அரச உரிமையைக் கொண்ட வங்கி ஏதாவதொரு தரப்பிற்கு பங்குகளை விநியோகிப்பது தனியார் மயப்படுத்தல் எனப்படும் விற்பனை செய்யும் செயற்பாடு அல்லவா என இலங்கை வங்கியின் ஊழியர் சங்கம் நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளது.