மேலதிக பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, குறித்த ​மேலதிக பயிர்களுக்கு நாட்டில் நிலவும் கேள்வி மற்றும் நாட்டில் காணப்படும் உற்பத்தித் திறன் தொடர்பில் தகவல்களைத் திரட்டுவதற்கு விவசாயத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கைச் செலவு குழுவுக்கு விடயங்களை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, கௌப்பி உள்ளிட்ட மேலதிக பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி வரியை அதிகரித்து அல்லது உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதை மட்டுப்படுத்துவதன் ஊடாக இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாத்தல் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.